Ukraine Drone Attack On Russia: ரஷ்யா மீது உக்ரைன் நேற்று நடத்திய டிரோன் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது உக்ரைன் தொடுத்த மிகப்பெரிய டிரோன் தாக்குதல் இதுதான்.
Ukraine Drone Attack: உக்ரைனின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல்
உக்ரைன் தனது டிரோன்கள் மூலம் ரஷ்ய நாட்டிற்குள்ளேயே சென்று சுமார் 40 போர் விமானங்கள் மற்றும் 5 ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதாவது உக்ரைன் தனது எல்லையில் இருந்து சுமார் 4000 கி.மீ., தொலைவில் உள்ள பகுதிகளையும் தனது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட TU-95 மற்றும் Tu-22 போர் விமானங்களும் தாக்குதலுக்கு ஆளாகின என கூறப்படுகிறது.
Ukraine Drone Attack: ரஷ்யா சொல்வது என்ன?
ஆனால் ரஷ்யா இவற்றை மறுக்கும் விதமாக விளக்கம் அளித்துள்ளது. ரஷ்யா வெளியிட்ட அறிக்கையின்படி, "மர்மன்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பிராந்தியங்களில் உள்ள விமானப்படை தளங்களை FPV ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் அரசு பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது. இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பிராந்தியங்களில் உள்ள விமானப்படை தளங்கள் மீதான அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டன. படைவீரர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட சிலர் பிடிப்பட்டனர்" என்றும் தெரிவித்திருந்தது.
Ukraine Drone Attack: எப்படி நடந்தது டிரோன் தாக்குதல்?
தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் மேற்பார்வையில் 'ஆபரேஷன் சிலந்தி வலை' என்ற பெயரில் கடந்த ஒன்றரை ஆண்டாக திட்டமிட்டு ரஷ்யா மீது இந்த தாக்குதலை தொடுத்துள்ளது. உக்ரைன் அதிகாரி ஒருவர் ஊடகத்திடம் கூறியதாவது, "இந்த ஆபரேஷன் நாட்டின் பாதுகாப்பு சேவையால் நடத்தப்பட்டது. ரஷ்ய விமான தளங்களுக்கு அருகில் ரகசியமாக நிறுத்தப்பட்டிருந்த டிரக்குகளில் இருந்து அதிகாரிகள் டிரோன்களை ஏவினர்" என்றார்
குறிப்பாக, சில டிரக்குகள் உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள சைபீரியாவில் நிறுத்தப்பட்டிருந்தன என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சரக்கு லாரிகளில் வைக்கப்பட்டிருந்த நடமாடும் மரக் கொட்டகைகளில் டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. குறிக்கப்பட்ட நேரத்தில் உடனே லாரிகளின் கூரைகள் திறக்கப்பட்டன. அதில் இருந்து டிரோன்கள் வெளியே வந்து ரஷ்யாவின் விமானத் தளங்களை குறிவைத்தது.
Ukraine Drone Attack: போர் நிறுத்த பேச்சுவார்த்தையும்... தாக்குதலும்...
ரஷ்யாவிடம் ஏவுகணைகள் எக்கச்சக்க உள்ளன. அவை உக்ரைனிடம் கிடையாது. அதற்கு பதிலாக ஒரு பெரிய தாக்குதலை டிரோன்கள் மூலம் திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளது. இது கடந்த காலங்களிலும் ரஷ்ய ராணுவம், எண்ணெய் கட்டமைப்புகளை தாக்கப் பயன்படுத்தியிருந்தது உக்ரைன். இன்று இஸ்தான்புல்லில் ரஷ்யாவுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையிலான குழுவை அனுப்புவதாக ஜெலென்ஸ்கி அறிவித்த நிலையில் நேற்று இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.
Ukraine Drone Attack: அமெரிக்காவுக்கு தெரிவிக்கவில்லை...
இது ஒருபுறம் இருக்க, ரஷ்யா மீதான இந்த மிகப்பெரிய தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை எனலாம். உக்ரைன் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இரு தரப்புமுமே தாக்குதல் குறித்து அமெரிக்க அரசுக்கு முன்கூட்டியே அறிவிப்பை வழங்கவில்லை என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா - ரஷ்யா இடையே எப்போதும் ஒரு பனிப்போர் நிலவும் சூழலிலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே இணக்கமான சூழலே இருந்தது. சமீபத்தில் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், புதினை பைத்தியக்காரர் என்றும், உக்ரைனில் தேவையில்லாமல் நிறைய பேரைக் கொன்று குவிக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், அந்த பதிவில் புதின் குறித்த தனது விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது உக்ரைனின் இந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்தால், பாலங்கள் இடிந்து விழுந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், 69 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
மேலும் படிக்க | தலைகீழான பாகிஸ்தான் நிலைமை... இந்தியாவிடம் பிச்சை எடுக்குது..!
மேலும் படிக்க | இந்த ஆண்டில் சுனாமி? காத்திருக்கும் பேரழிவு.. மிரளவைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!
மேலும் படிக்க | சும்மா இருங்கடா... ரஷ்யாவை மிரட்டும் ட்ரம்ப்... இனிமே தான் இருக்கு..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









