)
மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் வெடித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 3 கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்களை நடத்தி உள்ளது.
ஈரான் - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் நடந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக போர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே போர் தொடங்கி உள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக US Central Command வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற 3 சர்வதேச வர்த்தக கப்பல்களை ஈரான் தாக்கி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிறகே, ஈரான் மீது அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த வான்வழி தாக்குதலில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோர கண்காணிப்பு மையங்கள், ஏவுகணைமற்றும் ட்ரோன் ஏவுதளங்கள், துறைமுக உள்கட்டமைப்புகள் ஆகியவை சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கப்பல்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ஈரான் வழங்கப்பட்டிருந்த எண்ணெய் விற்பனைக்கான பொருளாதார தடை சலுகை உரிமத்தை அமெரிக்கா உடனடியாக ரத்து செய்துள்ளது. இந்த திடீர் ராணுவ நடவடிக்கையால், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த மாதம் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் முற்றிலுமாக உடைந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரானின் வெளியுறவு துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ”எண்ணெய் விற்பனை சலுகையை ரத்து செய்ததும், எங்கள் நாட்டின் மீது ரானுவத் தாக்குதல் நடத்தியதும் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா அப்பட்டமாக மீறியுள்ளதை காட்டுகிறது. தங்களின் தேசிய பாதுகாப்பை காக்க ஈரான் இதற்கு தகுந்த பதலடி கொடுக்கும்” என எச்சரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரானின் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் வெடித்தது. அதன்பின், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், அமைதியை நிலைநாட்டவும் பேச்சுவார்த்தைகள் நடந்தப்பட்டு வந்தன. தற்காலிக அமைதி ஒப்பந்தமும் போடப்பட்டன. இந்த நிலையில், தற்போது மீண்டும் ஈரான் - அமெரிக்காவுக்கு இடையே போர் வெடித்துள்ளது.