)
Charlie Kirk Murder Suspect Arrested: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு மிகவும் நெருங்கிய தோழரும், ஆதரவாளருமான சார்லி கிரிக் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சார்லி கிரிக்கை சுட்டுக்கொன்ற சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் அவரை அடையாளம் கண்டு தகவல் கொடுத்தன் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை போலீசார் தரப்பில் கைது நடவடிக்கை குறித்தோ, கைதானவர் குறித்தோ எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் தெரிவிக்காத நிலையில் டிரம்ப் முதன்முதலாக கைது குறித்து தகவல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்தின் பேரில் கைதாகி உள்ள நபர் சட்ட அமலாக்க அதிகாரிகளின் காவலில் விசாரணையில் இருப்பதாக உறுதிப்பட தெரிவித்த டிரம்ப், சார்லியின் மரணத்திற்கு காரணமானவரை தேடும் பணி முடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது வந்துள்ள தகவலின்படி, 22 வயதான டைலர் ராபின்சன் என்ற நபர்தான் சார்லியை சுட்டுக்கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை (நேற்று) இரவு 11 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று காலை) அவர் உட்டா மாகாண போலீசாரால் கைது செய்யப்பட்டதாக FBI தகவல் தெரிவித்துள்ளது. சந்தேகிக்கப்படும் கொலையாளிக்கு நெருக்கமானவரே அவரை போலீசாரிடம் பிடித்துக்கொடுத்ததாக டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில், டைலர் ராபின்சனின் தந்தையே அவர் குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
டைலர் ராபின்சன் விசாரணையின் போது கூறுகையில், 'தந்தையிடம் சார்லியை சுட்டுக்கொன்றது நான் தான் என சொன்னேன்' என்று வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. சார்லியை சுட்டுக்கொன்றவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கொலையாளியை பிடிக்க உதவி செய்பவர்களுக்கு, உரிய தகவல்களை கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
22 வயதான டைலர் ராபின்சனின் தந்தை, வாஷிங்டன் கவுண்டி ஷெரிப் துறையின் 27 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர் என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. டைலரின் தந்தை அமெரிக்க மத்திய பாதுகாப்பு அதிகாரியிடம் தனது மகன் குறித்து தகவல் கொடுத்துள்ளார். டைலர் ராபின்சனின் தாய் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகத்தில் பணியாற்றி வருகிறார். உட்டா மகாணத்தின் வாஷிங்டனில் டைலர் ராபின்சனின் வீடு இருக்கிறது. ஆறு படுக்கை அறைகளை கொண்ட அவரின் வீட்டின் மதிப்பு 6 லட்சம் அமெரிக்க டாலர்கள் என கூறப்படுகிறது. கொலை நடந்த இடத்தில் இருந்து தெற்கு பகுதியில் சுமார் 418 கி.மீ., தூரத்தில் அவர் வீடு உள்ளது.
சார்லி கிரிக் கொல்லப்பட்ட பின்னர், சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை FBI வெளியிட்டது. கருப்பு நிற முழு நீள கைக் கொண்ட டீ-சர்ட் அணிந்திருந்தார். அந்த டீ-சர்ட் முன் பக்கத்தில் அமெரிக்க கொடி அச்சிடப்பட்டிருந்தது. நீள நிற பேண்ட் அணிந்திருந்தார். தொப்பி மற்றும் சன்கிளாசஸ் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ