)
ஜப்பானின் புகுஷிமா என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்த ஒரு கரடி, அங்கிருந்த நான்கு பேரை கொடூரமாக தாக்கி உள்ளது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக ஜப்பானில் மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் கரடிகளின் ஊடுருவலும், மனிதர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் ஜப்பானில் கரடிகள் தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 230க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பான் வரலாற்றிலேயே கரடி தாக்குதலால் இந்த அளவிற்கு உயிரிழப்புகளும் பாதிப்புகளும் ஏற்பட்டது இதுவே முதல்முறையாகும்.
புகுஷிமாவின் சசாகினோ மாவட்டத்தில் உள்ள 'புகுஷிமா ஸ்டீல் ஒர்க்ஸ்' என்ற இரும்பு தொழிற்சாலையில் புகுந்த கரடி, அங்கிருந்த ஊழியர்களை தாக்கியதாக காவல்துறைக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
A bear attack in northeastern Japan left at least four people injured. Security footage from Fukushima Steel Works shows an Asian black bear chasing a worker by the entrance of the factory and throwing him to the ground pic.twitter.com/8i23l0NI8R
— Reuters (@Reuters) June 3, 2026
அங்குள்ள பாதுகாப்பு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு கரடி தொழிற்சாலை வாசலில் 20 வயது ஊழியர் ஒருவரை துரத்தி சென்று, தாக்குவது பதிவாகியிருந்தது. அதன் பின்னர், தொழிற்சாலை வளாகத்திற்குள் நுழைந்த அந்த கரடி, 60 வயது மதிக்கத்தக்க இன்னொரு ஊழியரையும் கடித்து குதறியுள்ளது.
இதுமட்டுமன்றி, அருகில் உள்ள மற்றொரு நிறுவனத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவரையும், குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த 80 வயது மூதாட்டி ஒருவரையும் இந்த கரடி அடுத்தடுத்து தாக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாரும் உயிரிழிக்கவில்லை. ஆனால் நான்கு பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய கரடி இன்னும் பிடிபடவில்லை. அது ஒரு தனியார் நிறுவன வளாகத்திற்குள் மறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள நோடா ஆரம்பப் பள்ளி உட்பட இரண்டு பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், தேவையற்ற வெளிப்பயணங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு அகிட்டா மாகாணத்தில் நடந்த கொடூர சம்பவத்தை நினைவூட்டியுள்ளது. அங்கு கடந்த ஆண்டு 60க்கும் மேற்பட்டோரை கரடி தாக்கிய நிலையில், அதில் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் மனிதர்களின் மக்கள் தொகை வேகமாக சரிந்து வருகிறது. அத்துடன் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கரடிகளை வேட்டையாடவோ அல்லது கட்டுப்படுத்தவோ போதிய இளைஞர்கள் இல்லாததே இந்த ஊடுருவலுக்கு முக்கியக் காரணம் என வனவிலங்கு வல்லுநர்கள் கூறுகின்றனர்.