ஹார்முஸ் நீரிணை செய்திகள்: மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள நேரடி மோதல், உலக நாடுகளை பெரும் பொருளாதார அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரானின் பதிலடித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடக்கூடும் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?, அது மூடப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?, அதனால் யாருக்கு பாதிப்பு அதிகம்? போன்ற விவரங்களை பார்ப்போம்.
ஹார்முஸ் நீரிணையின் தற்போதைய நிலை என்ன?
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) கப்பல்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தப் பாதை வழியாக எந்தக் கப்பலும் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன் வழியாக சென்ற சில கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஓமன் கடற்கரை பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று தாக்கப்பட்டிருப்பது மோதல் தீவிரமடைந்துள்ளதைக் காட்டுகிறது.
ஹார்முஸ் நீரிணை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
ஈரான் அதிகாரப்பூர்வமாக நீரிணையை மூடவில்லை என்றாலும், பாதுகாப்பு கருதி பல நிறுவனங்கள் தங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளன. ஏறத்தாழ 150-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் நங்கூரமிட்டு காத்திருக்கின்றன.
ஹார்முஸ் நீரிணை ஏன் இவ்வளவு முக்கியம்?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள இந்த நீர்ச்சந்தி, உலக எரிசக்தி தேவையின் இதயமாகக் கருதப்படுகிறது. இதன் அகலம் மிகக் குறுக்கியதாக தான் இருக்கும். வெறும் 33 கி.மீ தூரம் கொண்டது. அதிலும் இதில் கப்பல் பாதை என்பது வெறும் 3 கி.மீ மட்டுமே ஆகும்.
இவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் போக்குவரத்து நாளொன்றுக்கு 20 மில்லியன் பீப்பாய்கள் வரத்தகம் நடைபெறுகிறது. அதாவது உலக வர்த்தகத்தில் 1/5 பங்கு ஆகும். உலகின் 20% திரவ இயற்கை எரிவாயு இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. சவுதி அரேபியா, ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் எடுத்து செல்ல இந்த ஹார்முஸ் நீரிணை முக்கிய பங்கு வகிக்கிறது.
எண்ணெய் விலையில் ஏற்படும் தாக்கம்
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானின் நடவடிக்கையால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்கடங்காமல் உயர்த்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் $100-ஐத் தாண்டினால், அது உலகளாவிய பணவீக்கத்தை 0.6% முதல் 0.7% வரை உயர்த்தும்.
குறிப்பாக இந்த ஹார்முஸ் நீரிணை பாதை வழியாகச் செல்லும் 84% எண்ணெய் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்கே செல்கிறது. எனவே, இந்தியாவின் எரிபொருள் விலை மற்றும் உற்பத்திச் செலவுகள் கணிசமாக உயரக்கூடும்.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால், ஒரே இரவில் உலக எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு தடைபடும். இது வெறும் விலை உயர்வை மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும். எரிசக்தி விநியோகம் தடைப்பட்டால், தொழிற்சாலைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டு உலகப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கித் தள்ளப்படும் அபாயம் உள்ளது.
ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இது குறித்து இறுதி முடிவை எடுக்க வேண்டியுள்ளது. தற்போதைய சூழலில், கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மாற்றுப் பாதைகளை ஆராய்ந்து வருகின்றன. இருப்பினும், ஹார்முஸ் நீரிணைக்குச் சமமான மாற்றுப் பாதை இல்லாதது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
மேலும் படிக்க - 48 தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஈரான்! டிரம்ப் முக்கிய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









