Donald Trump Tariff Announcement: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட நாளாக, அந்நாட்டு மக்களிடம் சொல்லிவந்த அந்த "விடுதலை நாள்" ஒருவழியாக வந்துவிட்டது எனலாம். அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளை மறுவடிவமைப்பதற்கான நடவடிக்கை என கூறப்படும் நிலையில், இதுகுறித்து உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.
Donald Trump: உலகமே உற்றுநோக்கும் அறிவிப்புகள்
ஏப்ரல் 2ஆம் தேதி அன்று பெரும் பொருளாதார சீர்திருத்தத்தை கொண்டு வர இருப்பதாக டொனால்ட் டிரம்ப் நீண்ட நாளாக கூறி வந்தார். அந்த நாள் தற்போது வந்துவிட்டது. அதாவது, அமெரிக்காவின் உற்பத்தி பொருள்களுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் அதே வரியை, அமெரிக்காவும் அந்த நாடுகளின் பொருள்களுக்கும் விதிக்கும் (Reciprocal Tariffs) டிரம்ப்பால் அமல்படுத்தப்பட இருக்கிறது.
மற்ற நாடுகள் அமெரிக்காவின் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்தால், தாங்களும் அதேபோல் உங்கள் பொருள்களுக்கு அதிக வரிகளை விதிப்போம் என்றும் நீங்கள் வரிகளை தளர்த்திக்கொண்டால் நாங்களும் வரிகளை தளர்த்திவிடுவோம் என்றும் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். இதன்மூலம், மற்ற நாடுகள் அமெரிக்காவின் வழிக்கு வரும் என டொனால்ட் டிரம்ப் எதிர்பார்க்கிறார். மேலும், வெளிநாட்டுப் பொருட்களின் மீது அமெரிக்கா அதிகமாக சார்ந்திருப்பதை குறைக்கவும் சில வரிகள் அறிவிக்கப்படலாம். இது பெரிய பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Donald Trump: இந்திய நேரப்படி டிரம்ப் எப்போது அறிவிப்பார்?
அந்த வகையில், அமெரிக்காவின் பொருளாதாரத்தையே புரட்டிப்போடப்போவதாக கூறப்படும் விரிவான வரிகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகை ரோஸ் கார்டனில் இருந்து அறிவிக்க உள்ளார். இந்திய நேரப்படி ஏப். 3ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் எனலாம். டொனால்ட் டிரம்ப் அறிவிக்க உள்ள இந்த பொருளாதார சீர்திருத்தத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
குறிப்பிட்ட நாடுகள் அல்லது தொழில்களை குறிவைத்து வரிகளை அறிவிப்பதற்கு பதிலாக, ஏறத்தாழ ஒவ்வொரு நாட்டில் இருந்தும் வரும் பொருட்களுக்கு சராசரியாக 20% வரியை விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
Donald Trump: அமெரிக்காவுக்கு இணங்குமா மற்ற நாடுகள்?
டிரம்ப் அரசு ஏற்கனவே இதில் தீவிரமாக இறங்கிவிட்டது எனலாம். சீன நாட்டின் பொருள்களுக்கு அமெரிக்காவில் வரிகளை அதிகரித்துவிட்டனர். அதேபோல், அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகள் மீதான வரிகளும் உயர்ந்துவிட்டது. ஆனால் தற்போது, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கூடுதல் நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
டிரம்பின் "Reciprocal Tariffs" ஒரு உச்சவரம்பாகச் செயல்படும் என்றும், மற்ற நாடுகள் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்கும்பட்சத்தில், வரி குறைப்புகளை அமெரிக்கா அனுமதிக்கும் என்றும் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
Donald Trump: அமெரிக்காவுக்கு அதிக வருவாய்
புதிய வரிகளின் முதற்கட்ட அறிவிப்புகள் அனைத்தும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரலாம். வாகனங்கள் இறக்குமதிகள் மீது 25% வரி விதிக்கப்படும். அமெரிக்கா உட்பட வெனிசுலாவில் இருந்து எண்ணெய் அல்லது எரிவாயுவை வாங்கும் எந்தவொரு நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 25% வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய வரிகள் மூலம் குறிப்பிடத்தக்க வருவாயை அமெரிக்கா ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிகள் மூலம் ஆண்டுதோறும் 600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டப்பட வாய்ப்புள்ளது என்று வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ மதிப்பிட்டுள்ளார்.
Donald Trump: நுகர்வோருக்கு வரும் பாதிப்புகள்
டொனால்ட் டிரம்ப் அறிவிக்க இருக்கும் இந்த வரிகள் அனைத்து நுகர்வோரை பாதிக்கலாம். அவர்கள் நுகரும் பொருள்கள் விலை உயரலாம். இது விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கும் என பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உயர்த்தப்படும் இறக்குமதி வரிகளால் செலவுகள் அதிகரிக்கும், இது பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்கலாம் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
Donald Trump: வரிகளை குறைக்கும் இந்தியா...?
கடந்த திங்கட்கிழமை அன்று, வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய டிரம்ப்,"இந்தியா தனது வரிகளை கணிசமாகக் குறைக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன். பல நாடுகள் தங்கள் வரிகளைக் குறைக்கப் போகின்றன" என்றார். மேலும், தனது அணுகுமுறை பயனிப்பதாக கூறிய டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய வரி குறைப்புகளை சுட்டிக்காட்டினார்.
மேலும் படிக்க | லைவில் சண்டை போட்ட டிரம்ப்-ஜெலன்ஸ்கி! இவங்களுக்கு என்ன பிரச்சனை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ