No Confidence Motion Against Jagdeep Dhankhar: மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர் (Vice President Jagdeep Dhankhar) மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களுடன் அடிக்கடி மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகக் கூறி, நாடாளுமன்ற சட்டப்பிரிவு 67(B)-இன் கீழ் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன.
அந்த வகையில், இந்தியா கூட்டணியில் (India Bloc) உள்ள வெவ்வேறு கட்சிகளின் மாநிலங்களவை உறுப்பினர்கள் சுமார் 70 பேர் இந்த தீர்மானத்தில் ஏற்கெனவே கையெழுத்திட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை நடவடிக்கைகளை ஜெகதீப் தன்கர் கையாளுவதில் தொடர்ந்து அதிருப்தி எழுந்துள்ளதால் இந்த தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஒன்றாக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள்
குறிப்பாக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாதி கட்சி, திமுக உள்ளிட்ட முன்னணி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த தீர்மானத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்துள்ளனர். இந்தாண்டின் தொடக்கத்திலேயே மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவர இருப்பதாக தகவல்கள் வெளியாகியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசை அறிவித்த அரசு! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!
மாநிலங்களவையில் (Rajya Sabha) எப்போதுமே ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு, ஜெகதீப் தன்கர் பாரபட்சம் காட்டுகிறார் என இந்தியா கூட்டணியின் உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. அதிலும் குறிப்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் உரையாற்றும்போது இடைமறிப்பது, முக்கியமான விவகாரங்களில் விவாதம் நடத்த அனுமதிக்காதது, விவாதத்தின் போது ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு சார்பாக நடந்துகொள்வது என பல குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் அடுக்கின.
எதிர்க்கட்சிகள் அடுக்கும் குற்றச்சாட்டுகள்
பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் எதிர்க்கட்சி மாநிலங்களை உறுப்பினர்கள் இதுகுறித்து பொதுவெளியில் குற்றஞ்சாட்டினர். மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு தங்களின் கருத்துகளை வெளிப்படுத்த சரியாக வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார் எனவும், உரிய நேரம் ஒதுக்க மறுக்கிறார் எனவும் ஜெகதீப் தன்கர் மீது குற்றஞ்சாட்டினர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பேச எழுந்தால், அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மரபாகும். அந்த வகையில், காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே அவையில் உரையாற்றும் போது அடிக்கடி இடையூறு ஏற்படுத்துவதாகவும், அவரது மைக்கை பல சந்தர்ப்பங்களில் அணைத்ததாகவும் புகார்கள் எழுந்தன.
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்ததாகவும், அவை நாடாளுமன்ற விதிகளை மீறுவதாகவும் ஜெகதீப் தன்கர் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். அதாவது மாநிலங்களவையின் 238(2) விதியின்கீழ், உறுப்பினர்கள் பேசும்போது அவர்கள் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறுவதை வெளிப்படையாக தடைசெய்வதாகவும், இந்த விதி தலைவருக்கும் பொருந்தும் என்றும் எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் படிக்க | பெண்களுக்கு வேலை... எல்ஐசி கொண்டு வரும் புதிய திட்டம் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ