அமேதியில் காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி: கை ஓங்குமா, தாமரையே நீடிக்குமா?

Lok Sabha Elections: அமேதியில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் நிறுத்தாமல் காங்கிரஸ் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டதாக பாஜக கூறியது, அக்கட்சியின் ஆணவத்தை காட்டுகிறது என்றார் சர்மா. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 15, 2024, 04:50 PM IST
  • ஸ்மிருதி இரானியை எதிர்கொள்ளும் கிஷோரி லால் சர்மா.
  • அமேதி: காங்கிரசின் அன்றைய கோட்டை
  • 2019: அமேதியில் கிடைத்த அடி
அமேதியில் காங்கிரஸ்-பாஜக கடும் போட்டி: கை ஓங்குமா, தாமரையே நீடிக்குமா? title=

Lok Sabha Elections: 2024 மக்களவைத் தேர்தலின் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20 ஆம் தேதி நடக்கவுள்ளது. உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியிலும் ஐந்தாம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும், இங்கு, பாஜக சார்பில் சிட்டிங் எம்பி ஸ்மிருதி இரானியும், காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மாவும் களத்தில் களத்தில் உள்ளனர். அமேதியில் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்றது. 

இத்தொகுதியில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக ராகுல் காந்தியே களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சி ராகுல் காந்தி ரேபரேலியிலும் காந்தி குடும்பத்தின் விசுவாசி கிஷோரி லால் சர்மா அமேதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவித்தது.

ஸ்மிருதி இரானியை எதிர்கொள்ளும் கிஷோரி லால் சர்மா

அமேதியில் ஸ்மிருதி இரானியின் கடும் எதிர்ப்பை கே.எல்.சர்மா எதிர்கொள்ள நேரிடும். கேஎல் சர்மா தனக்கும் காந்தி குடும்பத்துக்கும் அமேதி தொகுதியுடன் உள்ள தொடர்பை உயர்த்துவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஸ்மிருதி இராணி தனது தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி இதுவரை தொகுதிக்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பி வருகிறார். 

41 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு உள்ளேன்: கிஷோரி லால் சர்மா

அமேதியில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே, காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் நிறுத்தாமல் காங்கிரஸ் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டதாக பாஜக கூறியது, அக்கட்சியின் ஆணவத்தை காட்டுகிறது என்றார் சர்மா. 41 ஆண்டுகளுக்கும் மேலாக அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளை தான் கவனித்து வருவதாகவும், காந்தி குடும்பம் அந்த பகுதியில் உள்ள அனைத்து மக்களின் மனங்களிலும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

“இது அவர்களின் தொகுதி என்பது சரிதான். கடந்த காலங்களில் கூட கேப்டன் சதீஷ் சர்மா இங்கிருந்து போட்டியிட்டார். ஆனால் சோனியா ஜி போட்டியிடும் நேரம் வந்தபோது, அவர் தனது தொகுதியை சோனியா அவர்களுக்கு வழங்கினார். எதிர்காலத்தில் அப்படியொரு நிலை ஏற்பட்டால் நானும் அவ்வாறே செய்வேன்” என்று சர்மா உறுதியுடன் கூறினார்.

மறுபுறம், அமேதியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி எடுத்த முடிவு தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்று ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். "காங்கிரஸ் கட்சியின் முழு உத்தியும் ஆற்றலும் என் மீது கவனம் செலுத்துவதில் இருந்தது என அவர்கள் கூறுவது எனக்கு ஒரு பெரிய பாராட்டு. ஏனென்றால் நான் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவன் என்று இதற்கு அர்த்தம்," என்று அவர் கூறினார்.

அமேதி: காங்கிரசின் அன்றைய கோட்டை 

பல தசாப்தங்களாக, அமேதியின் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருந்தனர். அங்கு தொடர்ந்து நேரு காந்தி குடும்ப உறுப்பினர்களை அல்லது குடும்பத்தின் ஆதரவுடன் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தனர். சஞ்சய் காந்தி 1980 இல் விமான விபத்தில் இறந்த பிறகு, அவரது சகோதரரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி 1981 இல் அமேதியில் வெற்றி பெற்றார். ராஜீவ் காந்தி 1991 இல் கொல்லப்படும் வரை அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகத் தொடர்ந்தார்.

மேலும் படிக்க | காங்கிரஸ் வென்றால் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச ரேஷன்: மல்லிகார்ஜுன கார்கே

3 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற சோனியா காந்தி 

ராஜீவ் காந்தியின் படுகொலையால் வந்த 1991 இடைத்தேர்தலில், காங்கிரஸின் மறைந்த சதீஷ் சர்மா 99,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 1998 வரை அவர் அந்த தொகுதியின் மக்களவை எம்பி ஆக இருந்தார். பாஜக-வின் சஞ்சய சிங் அவரை 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1999 பொதுத் தேர்தலில், சோனியா காந்தியின் தீர்க்கமான வெற்றியின் மூலம் காங்கிரஸ் மீண்டும் தனது கோட்டையை மீட்டது. சோனியா காந்தி அமேதியில் பாஜகவின் சஞ்சய சிங்கை எதிர்த்து 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2004: அமேதியில் ராகுல் காந்தியின் எண்ட்ரி 

2004-ல் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை அந்த தொகுதியில் நிறுத்த முடிவு செய்தார். அவர் ரேபரேலி மக்களவைத் தொகுதிக்கு சென்றார். 2004 இல், ராகுல் தனது முதல் தேர்தலில் அமேதியில் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் (3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள்) ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் வெற்றி பெற்றார். 

2019: அமேதியில் கிடைத்த அடி

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். எனினும், அந்த ஆண்டு அவர் அமேதியிலிருந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். ஆனால், ஸ்மிருதி இரானியின் கடும் எதிர்ப்பால் அவரது வெற்றி வித்தியாசம் குறைந்தது. அடுத்த மக்களவைத் தேர்தலில் 2019 ஆம் ஆண்டில், அமேதியில் இருந்து 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். இது காங்கிரசுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த அண்டும் அமேதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

மேலும் படிக்க | வீடு, கார் இல்லை... பிரமதர் மோடியின் சொத்து மதிப்பு... 2019 - 2024 ஓர் ஒப்பீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News