மலேசியாவுக்கு ஏற்றுமதியாகும் மருத்துவக் குணங்கொண்ட மண்பானைகள்...

சொதி மணக்கும் நெல்லை தாமிரபரணி மண்ணில் இருந்து மலிவான விலையில் மருத்துவக் குணங்கொண்ட மண்பானைகள் மலேசியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகவிருக்கிறது.

Written by - Amarvannan R | Last Updated : Dec 19, 2022, 02:34 PM IST
மலேசியாவுக்கு ஏற்றுமதியாகும் மருத்துவக் குணங்கொண்ட மண்பானைகள்...  title=

'தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்'. ஏனெனில், தை முதல் நாள் பொங்கல் பண்டிகையாகும். தமிழர் திருநாளான தை முதல் நாளில் மண்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து, படையலிட்டு சூரியனை வழிபடுவது என்பது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் தமிழர்களின் பாரம்பரியமாகும். அப்பாரம்பரியத்தை உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள் என்பது பெருமைக்குரியது மட்டுமல்ல ; மகிழ்ச்சிக்குரியதும்கூட.

பொங்கலை ஏன் மண்பானையில் வைக்கிறோம். அதில் மருத்துவக்குணம் அதிகம் இருப்பதால்தான். குறிப்பாக மண்பானை சோறு எளிதல் கெடாது. அதுபோலத்தான் மண்பானை கூழும். இரண்டுமே தாதுசத்துக்களை வீணாக்காமல் முழுமையாகத் தருகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அஜீரணக் கோளாறை சரி செய்கிறது. மலச்சிக்கலை தவிர்க்கிறது. மேலும் இயற்கை தந்த குளிர்சாதனை பெட்டிதான் மண்பானை. 

அவற்றில் கோடைக் காலத்தில் தண்ணீரை நிரப்பி வைத்தால் அதிலுள்ள நுண்துளைகள் மூலம் வெப்பத்தை வெளியேற்றி குளிர்ந்த நீரை நமக்குத் தருகிறது. மேலும் கெட்ட கிருமிகளை வெளியேற்றி, மனித உடலுக்குத் தேவையான நல்ல கிருமிகளை தக்கவைக்கிறது. ஆகமொத்தத்தில், நோய் தீர்க்கும் அருமருந்தாக மனித குலத்துக்குப் மண்பானை பயன்படுகிறது. ஆகவேதான், தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கடல் கடந்து அயல்நாடுகளுக்குச் சென்றாலும் , மண் வாசனை மிக்க மண்பானையும் அவர்களுடனேயே பயணிக்கிறது.

மேலும் படிக்க | சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து?

குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டுவரும் நிலையில், நெல்லை மேலப்பாளையம் - குறிச்சி பகுதிகளில் தயார் செய்யப்படும் மண்பானைகளில் பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபடுவதை அவர்கள் காலங்காலமாக கடைபிடித்து வருகின்றனர்.

அதிலும் தாமிரபரணி ஆற்றங்கரையோர மண்ணிலிருந்து செய்யப்படும் பொங்கல் பானைகளுக்கு சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் மிகுந்த வரவேற்புள்ளது. இதனால் மண்பானை தயாரிப்பு கூடங்களிலிருந்து சுமார் 3,000க்கும் அதிகமான மண்பானைகளில் கைத்தேர்ந்த சிற்ப கலைஞர்களைக்கொண்டு மூலிகை பூச்சிகளால் ஆன ஓவியம் மற்றும் வர்ணம் தீட்டப்பட்டு, கப்பல் மூலம் மலேசியாவுக்கு அனுப்பும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அது மட்டுமன்றி ; நெல்லை மேலப்பாளையம் - குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் மண்பாண்ட தொழிலாளர்களின் தயாரிப்புக் கூடங்களிலிருந்து சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட 12 வளைகுடா நாடுகளுக்கு மண்ணினால் செய்யப்படும் பிரியாணி சட்டி, சாம்பிராணி கிண்ணம், அகல் விளக்குகள்,தேநீர் கோப்பைகள், தண்ணீர் குடுவைகள், அலங்கார பூச்சட்டிகள் உள்ளிட்டவைகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

தாமிரபரணி மண்ணின் சுவையறிந்து நெல்லையில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக கப்பலில் மலேசியா செல்ல தயாராகும் பொங்கல் பானைகள். கடந்த ஆண்டைவிட கூடுதலாக முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நெல்லை மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி மாவட்டத்திலும் சுமார் 3000க்கும் அதிகமான மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பானைகள் அட்டைப் பெட்டிகளில் தனித்தனியாக அடைக்கப்பட்டு ஆறு பானைகள் அடங்கிய அட்டை பெட்டிகளை ஒரு பெட்டியாக மாற்றி, 150ரூபாய்க்கு என குறைந்த  விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பானைகள் அழகுறும் வகையில் தாமரை இதழ், இலை போன்ற வடிவங்கள் ஓவியமாக வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் பானைகளில் வர்ணம் பூச்சி நிறைவு பெற்றவுடன் நெல்லையிலிருந்து மலேசியாவிற்கு மண்பானைகள் அனுப்பி வைக்கப்படும்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே .தொழில்நுட்ப வளர்ச்சி கண்டறியப்படாத காலத்திலும் அறிவியல் பூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும், மருத்துவ ரீதியாகவும் மண்பானையை கண்டறிந்துள்ளான், தமிழன். அவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியும் ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்துக் கொண்டுதான் இருக்கின்றன. 

ஆகமொத்தத்தில், மண்சுவை மாறாத மண்பானையால் உலகெங்கும் தலைநிமிர்ந்து நிற்கிறது ; தமிழர்களின் பாரம்பரியம்!!!

மேலும் படிக்க | மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று! மீன்பிடித் தொழில் பாதிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News