புழுதிப்புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: மோடி!!
வட மாநிலங்களில் புழுதிப்புயலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது!
இந்தியாவின் வட மாநிலமான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கடந்த இரண்டு நாட்களாக புழுதிப் புயல் வீசியது. இதில் சிக்கி 100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புயல் காரணமாக சாலைகளில் இருள் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
புழுதி புயல் காரணமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால், பல பகுதியில் மின் சேவை முடங்கியுள்ளது. இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில்...!
புழுதி புயல் அடுத்த வாரம் மேற்கு ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் பரவும் எனவும், மேலும் இந்த புயலால் அடுத்த இரண்டு வாரங்களில், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் பாதிப்படையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வட மாநிலம் மட்டுமல்லாமல், தென் மாநிலமான தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கனமழை பெய்ததால் 10 பேர் பலியாகி உள்ளனர் என ஏஎன்ஐ(ANI) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.