புதுவையில் துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட 3 பாஜக எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுவை சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன் அரசு நிர்வாகத்துக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்க 3 பேரை நியமன உறுப்பினர்களாக நியமித்துக் கொள்ளலாம். இதுவரை நியமன உறுப்பினர்களை மாநில அரசு பரிந்துரை செய்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்தது.


இங்கு முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நிர்வாக ரீதியில் ஆளுநர் தலையிடுவதாக மோதல்கள் நீடித்தன. இதனால் நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்படவில்லை.


இந்நிலையில் பாஜகவின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வகணபதி ஆகியோர் பெயரை மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களுக்கு பரிசீலனை செய்து வந்தது. இதற்கு முதல்வர் நாராயணசாமி ஏற்கவில்லை.


இதை எதிர்த்து 3 எம்எல்ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல் கிரண் பேடி நியமனம் செய்த 3 எம்எல்ஏக்களின் நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணனும் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்குகள் இன்றைய தினம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த 3 பேரின் நியமனம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.