ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் இருந்தது: மருத்துவர் வாக்குமூலம்!
நான் சிகிச்சை அளித்தவரையில் ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள்தான் இருந்தது என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான அப்போலோ மருத்துவர் சாந்தாராம் வாக்குமூலம் அளித்துள்ளார்!
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
அப்போது இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் பரவலாக பேசப்பட்டு வந்தது. ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதில் முன்னாள் தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகனராவ், விவேக், கிருஷ்ணப்பரியா, மருத்துவர்கள் பாலாஜி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இதையடுத்து, அப்போலோ மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் ராமசந்திரன் ஆகியோர் நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான அப்போலோ மருத்துவர் சாந்தாராம் இன்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், 2000-2014 ஆம் ஆண்டு வரை நான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்துள்ளேன், அதுவரை ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய் கட்டுக்குள் தான் இருந்தது என்றார்.
மேலும், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தான் ஜெயலலிதாவுக்கு என்னால் சிகிச்சை தர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.