ஜூன் 10-ம் தேதி பாரத் பந்த்!! தொடங்கியது விவசாயிகள் போராட்டம்!!
நேற்று முதல் தொடங்கியது அடுத்த பத்து நாட்களுக்கான விவசாயிகள் போராட்டம்.
புது டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம் மாநிலம் உட்பட கிட்டத்தட்ட 15 மாநிலங்களில் விவசாயிகள் 10 நாள் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் பாதிப்பு உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூன் 1 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் மான்ட்சரில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 6 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன் நினைவாக நேற்று முதல் விவசாயிகள் 10 நாள் தொடர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் தொடங்கிய இந்த போராட்டம், படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கு பரவியது. பஞ்சாபில் பாலை சாலையில் ஊற்றியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். பெரும்பாலான மார்க்கெட்டிற்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படவில்லை.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும், நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
பொது மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் பால் மற்றும் காய்கறிகள் சப்ளை செய்யாததால், பெரும் சிரமங்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. போராட்டத்தின் கடைசி நாளான ஜூன் 10 ஆம் தேதி (10_வது நாள்) "பாரத் பந்த்" என நாடு தழுவிய போராட்டம் நடத்த அனைத்து மாநில விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வந்துள்ளது.
பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க, விவசாயிகளுடன் அரசு பேச்சுவாரத்தை விரைவில் நடத்துமா என எதிர்பார்க்கப்படுகிறது.