மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலினின் வீட்டிற்கு நள்ளிரவு வெடி குண்டு மிரட்டல்!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று நள்ளிரவில் மிரட்டல் வந்தது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த மர்ம நபர் ஸ்டாலின் வீட்டின் மீது குண்டு வீசுவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நள்ளிரவில் மு.க.ஸ்டாலின் வசிக்கும் ஆழ்வார் பேட்டை வீடு மற்றும் கருணாநிதி வசிக்கும் கோபாலபுரம் வீடுகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை நடத்தி வந்துள்ளனர். சோதனைக்கு பின்னர் வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
வீடு முழுவதும் சோதனையிட்டதில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கிடைக்கவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி அப்பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்களும் சிக்கவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இது பற்றிய தகவல்கள் ஏதும் தெரிய வில்லை!