புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2018-19 நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யவும், இது தொடர்பான விவாதங்கள் மற்றும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக, இன்று மீண்டும் புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது.


புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி கூடியது. அன்று அரசின் மூன்று மாத செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்திருந்தார். 


இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் துவங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல், இன்று போலி ஏடிஎம் கார்டு மோசடி, மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைப் பேரவையில் எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.


மேலும், இன்றைய பேரவைக் கூட்டம் முடிந்தவுடன், அலுவல் ஆய்வுக்குழு கூடிபட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க-வைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய மூன்று பேரையும் மத்திய அரசு எம்.எல்.ஏ-க்களாக நியமித்த விவகாரம், கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது குறிப்பிடத்தக்கது!