அட்சய திருதியை விற்பனையின் இழப்பு முதல், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இழப்பு என பல்வேறு காரணிகளால் India Inc பூஜ்ஜிய வருவாயை எட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) அறிவிப்பிற்கு பிறகு 12-க்கும் அதிகமான நிறுவனங்கள் COVID-19 இனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளன. பங்கு வர்த்தகத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை லாக்டவுன் தொடர்பான தங்கள் நிறுவனங்களின் நிலைப்பாட்டையும், நிறுத்தப்பட்ட செயல்பாடுகள் தொடர்பான செய்திகளையே வெளியிட்டன. ஆனால் நிதி மதிப்பீடு ஏதும் வெளியிடப்படவில்லை.


தற்போது டி-மார்ட், ட்ரெண்ட், கொச்சின் ஷிப்யார்ட், டைட்டன், லீலா ஹோட்டல் போன்ற நிறுவனங்கள் இந்த பெருந்தொற்றினால் எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் சாவல்களைப் பற்றி கவலைகளை வெளிப்படுத்தியுள்ளன.


இந்த நிறுவனங்களின் வெளிப்பாடுகள் India Inc-ன் வேதனையையும், கவலையையும் வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.  வருவாய் இல்லை, விற்பனை இல்லை, முன்பதிவு இல்லை, புலம்பெயர்ந்த பணியாளர்கள், சொந்த இடத்திற்கு சென்றுவிட்டதால், பணியாளர்களின் பற்றாக்குறை, அத்தியாவசிய சேவைகளின் செயல்திறன் குறைந்தது என பல்வேறு காரணிகளும் குறைந்தது இரு காலாண்டுகளுக்காவது நிதி இருப்பைப் பாதிக்கும்.


நிதி நிலைமைகள் மோசமாகத் தெரிந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களிடம் போதுமான பண இருப்பு இருப்பதாகவும், நிலுவையில் உள்ள கடன்களுக்கான பொறுப்பை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளன.


வருவாய் மற்றும் லாபம் ஆகியவற்றில் COVID-19 தாக்கத்தை ஏற்படுத்துவதால் அடுத்த நாட்களில் இன்னும் இதுபோன்ற பல வெளிப்பாடுகளை நாம் பார்க்க முடியும். COVID-19 மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருளாதார மந்தநிலை ஆகியவற்றின் விளைவுகள் தொடர்பாக உறுதியாகக் கூற முடியாமல் நிதித் தாக்கத்தை வெளியிட நிறுவனங்கள் இதுவரை தயங்கிக் கொண்டிருந்தன.


"சாதாரணமான சூழ்நிலையில், ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் முக்கிய வணிகம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பங்குதாரர்களுக்கு வெளிப்படையான முறையில் தெரிவிக்க வேண்டும், இது பங்குதாரர்களுக்கு அபாயங்களையும், நன்மைகளையும் மதிப்பிடுவதற்கும், விழிப்புணர்வுடன் இருப்பதற்கும் உதவுகிறது. COVID-ன் தாக்கத்தின் போதும் இதுவே தொடர்ந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, பல நிறுவனங்கள் இந்த தத்துவத்தை நம்பவில்லை என்பதால், செபி ஒரு கட்டுப்பாட்டாளராக செயல்பட்டு, மைக்ரோமேனேஜ் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கும் நிர்பந்தம் ஏற்பட்டது.  நெருக்கடியின் தாக்கத்தைப் புரிந்துகொண்டு பங்குதாரர்கள் உரிய முடிவை எடுக்க முடியும் என்பதால் செபி எடுத்த நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்" என்று பங்குதாரர் அதிகாரமளித்தல் சேவைகளை வழங்கும் ப்ராக்ஸி ஆலோசனை நிறுவனத்தின் இணை நிறுவனரும், மேலான்மை இயக்குநருமான JN குப்தா கூறுகிறார்.  


முன்னதாக, COVID-19 இன் தாக்கம் தொடர்பான நிதித் தகவல்களை முதலீட்டாளர்களுக்கு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என மே 20 அன்று செபி  அறிவுறுத்தல் வெளியிட்டது. பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு சரியான நேரத்தில், போதுமான தகவல்களையும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களையும் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்என்றும் செபி கூறியது.


பெருந்தொற்றால் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளான லீலா குழுமம் மற்றும் எச்.எல்.வி லிமிடெட் போன்றவை நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு வருவாய் பூஜ்ஜியமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளன. பெருந்தொற்றின் தாக்கத்தால், இரண்டாம் காலாண்டிலும் இதே நிலை தொடரலாம் என்றும் இந்த நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.


"இன்றைய சூழ்நிலையில் எதிர்காலத்திற்காக எந்தவொரு முன்பதிவுகளும் செய்யப்படவில்லை, தற்போதைய முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலைமை உடனடியாக மீள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.  நிலைமையில் மீட்சி ஏற்படுவது என்பது,  விமானப் பயணம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கான தளர்வு மற்றும் பொருளாதாரம் மீள்வது என பல்வேறு காரணிகளைச் சார்ந்தது” என்று லீலா குழுமம் தெரிவித்துள்ளது. இது சேவை மற்றும் விருந்தோம்பல் நிறுவனங்களுக்கு பொருந்தும்.


அத்தியாவசிய வகை பொருட்களுக்கான சேவைகளை வழங்கும் டிமார்ட், அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் போன்றவை கொரோனா பாதிப்பின்போது தொடர்ந்து செயல்பட்டாலும், இவற்றின் வருவாய் 45% குறைந்துள்ளது.


"இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் கடைசி 9 நாட்கள் தொடர்ந்த லாக்டவுனால் 2020 மார்ச் மாதத்தில் இந்த நிறுவனங்களின் வருமானம் வெறும் 11% சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்த நிலைமை மிகவும் மோசமடைந்தது.  அந்த சமயத்தில், எங்கள் கடைகளில் பாதிக்கும் மேற்பட்டவை மூடப்பட்டிருந்தன குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு மட்டுமே இயங்கின” என்று டிமார்ட் நிறுவனம் கூறுகிறது.


டைட்டன் நிறுவனத்தைப் பொறுத்தவரை நகை வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பை குறிப்பாகச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக முக்கியமாக அட்சய திருதியை நாளான்று ஏற்பட்ட விற்பனை இழப்பும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விற்பனை முழுமையாக முடங்கிப் போனதால் ஏற்பட்ட இழப்பும் மிகப்பெரிய அளவில்   இருந்தது.  பொதுவாக இது திருமணக் காலம் என்பதால், வழக்கமாக விற்பனை உச்சத்தில் இருக்கும்.  ஆனால் கொரோனா அனைவரையும் வீடுகளில் முடக்கிவிட்டதால், ஆன்லைன் விற்பனை மட்டுமே ஓரளவுக்கு சாத்தியமானது. 


“ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும்.  ஆனால், இந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து திருமணங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 (ஏப்ரல் மற்றும் மே) மாதங்களில், லாக்டவுனின் முதல் 6 வாரங்களில் விற்பனை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக இருந்தது.  இது  நிறுவனத்தின் பணப்புழக்கத்தை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டது. தங்கத்தின் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய செலவுகளின் காரணமாக தங்கம் வாங்கும் போக்கு குறைந்துவிட்டது என்று டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 


டி.டி.கே ஹெல்த்கேர் லிமிடெட் தனது அறிக்கையில், 2020 ஏப்ரலில் சராசரி விற்பனையில் 50% நடைபெற்றதாகவும், அப்போது சிறப்பாக செயல்பட்ட உணவு வணிகம், 2020 மே மாதத்தில் மேலும் சிறப்பாக மேம்படும் என்றும் தெரிவித்தது. அதோடு, மருந்துத்துறையின் சராசரி விற்பனையில் 40-50% அளவிற்கு விற்பனை செய்துள்ளது.  மருந்துகள், உட்வார்ட்ஸ் க்ரேப்வாட்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களாக வகைப்படுத்தப்பட்ட தயாரிப்புகளும்,  அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள் போன்ற பிற வகை பொருட்கள் மிகக் குறைந்த அளவே விற்பனையானதாகவும் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் பாதிப்புகளே அதிகமாக இருக்கும் சாத்தியங்களை நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. 


கொச்சின் ஷிப்யார்ட் வெளியிட்டுள்ள 20 பக்க அறிக்கையில், திட்டங்களை இயக்குவதில் தாமதம் போன்றவை, நிதி வரத்திலும், நிறுவனத்தின் லாபத்தன்மையிலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் முழுமையான மதிப்பீடு என்பது செயல்பாடுகள் இயல்புநிலைக்கு வந்த பிறகே சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளது.


லாக்டவுன் முடிவுக்கு வந்த 3 முதல் 6 மாதங்களுக்கு பின்னரே இயல்பான நிலையில் பணிகள் வழக்கம்போல் தொடங்கப்படும் என்று ரியல் எஸ்டேட் நிறுவனமான கோல்டே பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.  ஏனென்றால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் படிப்படியாக திரும்பி வந்து தங்கள் வேலையைத் தொடங்கினால்தான் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும். புனே மற்றும் பெங்களூரில் உள்ள தங்களுடைய கட்டுமானத் தளங்களில் பணிபுரிய  40% கட்டுமானப் பணியாளர்களே இருப்பதாக கோல்டே பாட்டீல் டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  


(மொழியாக்கம் - மாலதி தமிழ்செல்வன்)