அலர்ட் மக்களே.. இந்த தொகைக்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தால் 100% அபராதம்!!
Cash Transaction: நீங்கள் ஒருவரிடமிருந்து பெறும் பணத்திற்கு வரம்பு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
தினமும் பண பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும். நீங்கள் ஒருவரிடமிருந்து பெறும் பணத்திற்கு வரம்பு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு நாளில் ஒருவரிடமிருந்து ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேல் பெற்றால், அபராதம் கட்ட வேண்டியிருக்கும். இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பணம் கொடுப்பவருக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை, மாறாக அதை பெறுபவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இப்படி ஒரு விதி எதற்கு? இது எதற்காக உருவாக்கப்பட்டது? அனைத்தையும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வரி ஏய்ப்பைத் தடுக்க வருமான வரிச் சட்டத்தின் 269ST பிரிவில் அரசாங்கம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. இந்த விதியை இந்த அரசு எப்போது கொண்டு வந்தது? அதில் என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
பிரிவு 269ST என்றால் என்ன?
மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் 269ST பிரிவைச் சேர்த்தது. இந்த விதியின்படி ஒரு நாளில் ஒரு நபர் ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற முடியாது. கறுப்புப் பணம் மற்றும் பண மோசடி நடவடிக்கைகளை தடுப்பதே அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக பெற்றுக் கொண்டிருந்தால், இனி அப்படி செய்யாதீர்கள். இந்த தொகையை ரொக்கமாக பெறவில்லை என்றால் பின் எப்படி பெறுவது என நம் மனதில் கேள்வி வரலாம். நீங்கள் ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வங்கிச் சேனல்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும். அதாவது அகவுண்ட் பேயீ செக் (account payee cheque), பேங் ட்ராஃப்ட் (bank draft), மூலம் பரிவர்த்தனை செய்யலாம், அல்லது இணைய வங்கி மூலம் வங்கிக்கு தொகையை மாற்றலாம்.
2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு நீங்கள் செல்ஃப் செக்கைப் பயன்படுத்தினால், அதுவும் பணப் பரிவர்த்தனையாகக் கருதப்பட்டு அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பரிசாகப் பெறப்படும் தொகைக்கும் இந்த விதி பொருந்தும். எந்தவொரு விசேஷ சந்தர்ப்பத்திலும் எவரிடமிருந்தும் 2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிசை யாரும் ஏற்க முடியாது. ஒரு நபர் தனது உறவினர்களிடமிருந்து பெறும் பணத்திற்கும் இந்த விதி பொருந்தும்.
இந்த வழக்குகளில் விதி பொருந்தாது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST, அரசு, வங்கி நிறுவனங்கள், தபால் அலுவலக சேமிப்பு வங்கி அல்லது கூட்டுறவு வங்கி ஆகியவற்றால் பெறப்பட்ட தொகைக்கு பொருந்தாது.
அபராதம் எவ்வளவு?
ஒரு நபர் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 269ST ஐ மீறினால், பரிவர்த்தனையின் தொகைக்கு சமமான அபராதம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக பிரிவு 269ST இன் விதிகளை மீறி ஒருவர் ரூ. 2,10,000 -ஐ பெற்றால், அவருக்கு ரூ. 2,10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
கூடுதல் தகவல்:
வீட்டில் எவ்வளவு பணம் ரொக்கமாக வைத்திருக்கலாம்?
நாட்டில் வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப் பணத்தின் பரவலை சமாளிக்கும் பொருட்டு இந்திய அரசு ஒருவரிடம் எவ்வளவு பணம் இருக்கலாம் என்பதற்கான வரம்புகளை விதித்துள்ளது. வீட்டில் பணத்தை வைத்திருப்பது இரண்டு விஷயங்களைப் பொறுத்தது, உங்கள் நிதி திறன் மற்றும் உங்கள் பரிவர்த்தனை பழக்கம். மக்கள் தங்களது வீடுகளில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க வேண்டும் என்பதற்கு வரம்புகள் எதுவும் இல்லை, மக்கள் அவர்களுக்கு தேவையான பணத்தை வீட்டில் வைத்திருக்கலாம். ஆனால் வீட்டில் ரொக்கமாக இருக்கும் பணத்திற்கான பதிவு, கணக்கு ஆகியவற்றை நீங்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் உங்கள் வருமானத்தின் ஆதாரம் மற்றும் நீங்கள் உங்கள் வரிகளை செலுத்தியுள்ளீர்களா இல்லையா என்பதற்கான சான்றுகளையும் நீங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க | பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ