புதுடெல்லி: தலைமுடி ஒருவரின் அழகுக்கு அழகூட்டுவது மட்டுமா?  அரசனுக்கு பதவி வழங்கும்போது அதை முடி சூடுவது என்றே சொல்வார்கள்.  அதாவது ஒருவரின் தலைக்கு மேல் இருப்பது ஒரு மனிதரின் பெருமையை பறை சாற்றுவதாக பொருள் கொள்ளப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரீடமாக இருந்தாலும், மணி மகுடமாக இருந்தாலும் அது தலையில் இருந்தால் தான் மதிப்பு. மகுடம் சூடாவிட்டாலும் மனிதர்களின் தலையை அலங்கரிப்பது தலைமுடிதான்.  தலைமுடியை வைத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை சொல்லும் வல்லுநர்களும் உண்டு.  பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா என்று கேட்டு திருவிளையாடல் நாடகமும் நடந்த வரலாறும் அனைவருக்கும் அறிந்ததே.  


உண்மையில் தலைமுடி என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்களில் பலவற்றுக்கு உண்டு. நமது உடலை தட்பவெட்பத்தில் இருந்து  பாதுகாப்பதற்கு முடியின் பங்கு முக்கியமானதாகும். இந்த முடியை இழப்பது என்பது பெரும்பாலனவர்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கிறது.


ஆனால், கடவுளுக்கு நேர்ந்துக் கொண்டு நேர்த்திக் கடனாக முடி கொடுக்கும் பழக்கம் தமிழர் பண்பாட்டில் தொன்று தொட்டு வருவது. மதம் சார்ந்த சடங்காகவும் முடி இறக்குவது என்ற நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தை பிறந்த சில மாதங்களில் அவரவர் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப கோவில்களில் முடி இறக்கும் பழக்கம் உண்டு.


சில முக்கியக் கோயில்களில் முடியை இறைவனுக்கு  காணிக்கையாக கொடுப்பது மிகவும் பிரபலமானது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கும் பழநி முருகனுக்கும் முடி கொடுத்தால் துயரங்கள் தீரும் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு. 


அதிலும் குறிப்பாக திருப்பதி என்றாலே ‘மொட்டை’ மற்றும் ‘லட்டு’ தான் முதலில் நினைவுக்கு வரும்.  இந்த கொரோனா காலத்தில் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் என்றால், கோவிலுக்கு போக முடியாதது பலருக்கு மாபெரும் கவலையாக மாறிவிட்டது.


பக்தர்கள் வரவில்லை என்றால் தெய்வத்திற்கும் வருத்தம் வருமா என்ன? ஆனால், ஆலயத்தின் காணிக்கைக்கு பங்கம் வந்துவிட்டது என்பது செய்திகளில் இடம் பிடித்துள்ளது.


இந்த நிலையில் திருப்பதி கோவிலில் முடி வர்த்தகம் வழக்கத்தை விட அதிக மதிப்புக்கு நடைபெற்றது என்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது எப்படி?


வெட்டினால் மீண்டும் வளரும் முடியை சிலர் ஆண்டுக்கு இருமுறை கூட காணிக்கையாக கொடுக்கின்றனர். சரி, கோடிக்கணக்கான பக்தர்கள் தெய்வத்திற்காக கொடுக்கும் முடியை ஆலய நிர்வாகம் என்ன செய்யும் என்று தெரியுமா?
காணிக்கையாக கொடுக்கும் தலைமுடி ஆன்லைன் வர்த்தகத்தில் சக்கை போடு போடுகிறது. 


Also Watch | வண்ணமிகு பூஜடை அலங்காரம் புகைப்படத் தொகுப்பு


தற்போது கோவில்கள் லாக்டவுனால் மூடப்பட்டிருந்தபோது பக்தர்கள் முடி காணிக்கை கொடுக்க கோவிலுக்கு வரவில்லை.  எனவே முடியின் வரத்து குறைந்ததால், தேவை அதிகமாகிவிட்டது.  வேறு எங்கும் முடி இருப்பு இல்லாத நிலையில் திருப்பதி ஆலயத்தில் மட்டும் முடி இருப்பில் இருந்ததால், பெருமாள் தனது செலவுக்கான பணத்தை பக்தர்களிடம் இருந்து வேறு வழியில் பெற்றுக் கொண்டார்.  


வழக்கமாக 28 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் முடியானது சில நாட்களுக்கு முன் விலை உயர்ந்ததால், ஆன்லைன் வர்த்தகத்தில் 37 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானதாம்!
”மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்” என்ற பழமொழியை கேட்டிருக்கலாம், இதை பழம் மொழியாக்குவதற்காக, விக் என்ற கலாச்சாரம் வந்துவிட்டது.  இந்த விக்குகளை தயாரிப்பதற்காகத் தான் பெருமளவில் தலைமுடி பயன்படுத்தப்படுகிறது.


கூந்தல் பராமரிப்பு மற்றும் அழகு சார் தொழில் துறையின் அபரிமிதமான வளர்ச்சியினால், தரமான முடிகளுக்கான தேவை உலக சந்தையில் அதிகரித்துள்ளது. இந்தியா ஒரு முக்கிய ஏற்றுமதி நாடாக உள்ளது.


Also Read | கொரோனாவில் இருந்து விலக்கு கிடைத்தாலும், விலங்குகளைக் கண்டு நடுங்கும் பக்தர்கள்


திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், மத்திய அரசின் சொந்தமான எம்.எஸ்.டி.சி. லிமிடெட் (Metal scrap trading company), மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆன்லைன் ஏல முறையில் முடி விற்பனை செய்கிறது. உலகெங்கும் இருந்து வரும் பக்தர்கள் திருப்பதி கோவிந்தனுக்கு கொடுக்கும் முடி காணிக்கையின் அளவு ஆண்டுக்கு 500 டன்களுக்கு அதிகம் ஆகும். ஆண்டுக்கு 300 முதல் 400 கோடி ரூபாய் வரை பக்தர்களின் முடி காணிக்கையால் திருப்பதி கோவிலுக்கு வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.  


திருப்பதி பெருமாளுக்கு பக்தர்களால் கொடுக்கு முடிக் காணிக்கையை ஏலம் விடும் தொகையின் மதிப்பு, திருப்பதி கோவிலின் வருமானத்தில் 10 சதவிகிதம் என்பது பக்தர்களின் முடிக் காணிக்கையின் மகத்துவத்தை குறிப்பதாக இருக்கிறது. முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் உள்ள தென்னிந்தியா, உலக முடி சந்தையில் பெரும் பங்கு வகிக்கிறது. கோவில் நிர்வாகங்கள், முடிகளை தரம் பிரித்து, மெட்டல் ஸ்கிராப் டிரேடிங் நிறுவனத்தின் மூலம் உலகளாவிய டெண்டர்கள் மூலம் முடியை விற்பனை செய்து வருவாய் ஈட்டுகின்றன. 


முடியின் நீளம், வண்ணம், அது நேராக இருக்கிறதா, அல்லது சுருண்டிருக்கிறதா? என்பது போன்ற பல காரணிகளின் அடிப்படையில் தரம் தீர்மானிக்கப்படும். அதேபோல், முடிக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் தூய்மையின் அளவு போன்றவற்றை கொண்டும் முடியின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது. 


மிகச் சிறந்த தரத்தை கொண்ட முடி, ரெமி (Remy)என்று அழைக்கப்படுகிறது. சேதமடைந்த, அல்லது சாயம் பூசப்பட்ட  முடிகள், Non Remy அதாவது ரெமி அல்லாதவை என்று அழைக்கப்படுகின்றன. 


Non Remy முடிகள் ரசாயன முறையில் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ரெமி வகை முடியினால் செய்யப்பட்ட பொருட்கள் விலை அதிகம் கொண்டவை. ரெமி அல்லாத முடி அல்லது இதர இழைகளுடன் கலக்கப்பட்ட மனித முடிகள் விலை குறைவானவை. ரெமி வகை முடியின் விலை கிலோவிற்கு 4,000 முதல் 25,000 ரூபாய் வரை என தரத்திற்கு ஏற்றாற் போல் நிர்ணயிக்கப்படுகிறது. Non Remy கிலோ 3,000 முதல் 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


 Also Read | கோயில்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலைத் தொடங்கும் தமிழக அரசு


ரசாயனங்கள் குறைவாக இருப்பதோடு, செயற்கை கூந்தல் பராமரிப்பு பொருட்கள் குறைவாக பயன்படுத்தப்படுவதால் இந்திய முடிக்கு உலக அளவில் கிராக்கி அதிகம். இந்திய முடிகளில் பெரும் பகுதி கோவில்களில் காணிக்கையாக பெறப்படுவதால், அவை இயற்கை தன்மை அதிகம் கொண்டதாகவும், சுத்தமானதாகவும் இருக்கின்றன. 


சரி, வாங்கும் இந்த முடிகளை என்ன செய்வார்கள்?  
அழகு பராமரிப்புத் துறையில் விக்குகள் தயாரிக்கும் தொழில் பல பில்லியன் டாலர்கள் புழங்கும் தொழிலாகும். ஆண்டொன்றுக்கு சர்வதேச அளவில் முடி வர்த்தகத்தின் மதிப்பு குறைந்தது, 250 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இனிமேல் யாரையும் ‘உதிர்ந்த கூந்தல்’ என்று மதிப்பில்லாமல் பேச மனம் வருமா?