சென்னையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் மீது  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடைபெற்றது, போராட்டம் காரணமாக பல இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டுள்ளன. அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 90 சதவிகிதம் போக்குவரத்து முடங்கியது.


அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலைகளில் நேற்று எதிர்க்கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடற்கரை காமராஜர் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அழைத்துச்செல்லப்பட்ட ஸ்டாலின் உட்பட எதிர்கட்சி தலைவர்களை  காவல்துறையினர் சிறிது நேரம்  கழித்து விடுவித்தனர்.


இந்நிலையில், போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். தடையை மீறி போராட்டம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இதற்கிடையே, காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.