காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்தது. காலக்கெடு முடிந்துவிட்டது. அதனால் மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி பிரச்சினை தொடர்பாக புதன்கிழமை ஏப்ரல், 3-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளன.


இதற்கிடையே சென்னையில் நேற்று போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கைதாகி விடுதலையானார்கள்.தமிழகமே போராட்டக்களமாக மாறி உள்ள நிலையில், அவசர ஆலோசனை நடத்துவதற்காக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்திருந்தார். 


இதனையடுத்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் ஆகியோர் நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 


நேற்று பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை இந்த கூட்டம் நடந்தது.கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசு மீது, தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது பற்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டதையும் கவர்னர் கேட்டறிந்தார்.


மேலும் நேற்று மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கைதானது குறித்தும், அ.தி.மு.க. சார்பில் நாளை உண்ணாவிரதம் இருப்பது குறித்த முழுவிவரங்களையும் கேட்டறிந்த அவர், சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும், தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலை குறித்தும் ஆலோசித்தார்.