காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்து உள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் தமிழகம் போராட்டக்களமாக மாறி இருப்பதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கி. வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் மறியலில் பங்கேற்றுள்ளனர். பின்னர் அவர்கள் மெரினா கடற்கரையை நோக்கி பேரணியாக சென்றனர். 


அதேபோல தமிழகத்தைச் சேர்ந்த 15 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 90 சதவிகிதம் போக்குவரத்து முடங்கியுள்ளது.



இன்று காலை 6 மணி முதல் கடைகள் மூடப்பட்டன. குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. மற்ற மாநில பேருந்துகளும் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. 5-ஆவது நாளாக திமுக மறியல் போராட்டம் நடத்தி வருகிறது.


இந்நிலையில் தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவிலும் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், தமிழக, கர்நாடக மாநில எல்லையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று முழு அடைப்பையொட்டி தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள் ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளன. 


காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசியல் கட்சிகள் முற்றும் வணிக சங்கங்கள் நடத்தி வரும் பந்தினை முன்னிட்டு ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். சென்னையில் சுமார் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.