21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவுக்கு 8 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் கிடைத்தன. 10-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 59 பதக்கம் பெற்று இருந்தது.


கடைசி நாளான இன்று இந்தியாவுக்கு ஒரே ஒரு தங்கம் பதக்கம் கிடைத்தது. இது இந்தியா பெற்ற 26-வது தங்கம். பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் தங்கம் வென்றார். இதே போல 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் இன்று கிடைத்தது. பேட்மிண்டனில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சிராக் - சத்விக் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. 


ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா - ஜோஸ்னா ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்றது. டேபிள் டென்னிசில் சரத்கமல், சத்யன் - மணிகா பத்ரா ஜோடி வெண்கலப்பதக்கம் பெற்றனர்.இந்திய அணி 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் ஆக மொத்தம் 66 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.



கடந்த 2014-ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை விட இந்தியாவின் சிறந்த நிலையாகும். அதாவது 15 தங்கம் உள்பட 64 பதக்கம் பெற்று 5-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது அதிகமான தங்கப்பதக்கத்தை குவித்து 3-வது இடத்துக்கு முன்னேறிடுள்ளது குறிப்பிடத்தக்கது. 


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா இன்று மாலை நடக்கிறது. இந்தியா சார்பில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரிகோம் நிறைவு விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது..!