சபரிமலை மண்டல பூஜை திருவிழாவிற்கு கோவில் பிரகாரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கேரள காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதோடு, 10,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களில் பாதுகாப்பு வரிசைப்படுத்தல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூன்று மாத கால புனித யாத்திரைக்காக சபரிமலை கோவில் வரும்  நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்படுகிறது. நாடெங்கிலும் இருந்து சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வருவதர்கான நோம்பினை தற்போது துவங்கியுள்ளனர்.  இந்நிலையில் கோவில் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பணியில் கேரளா காவல்துறையினர் ஈடுப்பட துவங்கியுள்ளனர்.


அந்த வகையில் சபரிமலை பாதுகாப்பு பணிக்காக 24 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர்கள், 112 துணை SP-க்கள், 264 ஆய்வாளர்கள், 1185 துணை ஆய்வாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கேரள காவல்துறை வெளியீடு தெரிவித்துள்ளது. மேலும், ஆலய வளாகத்தை சுற்றி 307 பெண்கள் உட்பட மொத்தம் 8402 சிவில் காவல்துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக நவம்பரில், கேரள முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் நுழைய அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தவிர்ப்பதற்கு சட்டங்களை உருவாக்க முடியாது என்று தெரிவித்தார். 


முன்னதாக சபரிமலை இறைவன் அய்யப்பா கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் நுழைய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 அன்று அனுமதி அளித்தது. இந்த வரலாற்று தீர்ப்பினை அடுத்து மாநிலத்தில் கடும் போராட்டங்கள் வெடித்தது.


உச்சநீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்திய மாநில அரசின் மீது கேரள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் விளைவாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளா ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி படு தோல்வி கண்டது.  கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. ஏனைய 19 தொகுதிகளையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.


கம்யூனிஸ்டுகளின் தோல்விக்கு சபரிமலை பிரச்சினையே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. என்றபோதிலும் "கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் ஒருபோதும் பின்வாங்காது. நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை. அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கேரள முதல்வர் பினராயி அதிரடி அறிவிப்பினை அறிவித்தார்.


மேலும்., சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது அரசின் முடிவல்ல. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த கடமையைதான் கேரள அரசு செய்தது எனவும் அவர் தெரிவித்தார்.


மாநில அரசு தனது நிலைப்பாடில் உறுதியாக இருக்கும் நிலையில், தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்படும் போது சபரிமலை கோவிலுக்கும் மகளிர் விஜயம் வழக்கம்போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.