ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் அனேக இடங்களில் ஸ்ரீ ராம பஜனை, சீதா கல்யாண மகா உற்சவ விழா போன்று அரங்கேறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். 


ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் பத்து நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங்களோடு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர்.


ராமநவமி அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்தையும், ராமாயண காவியத் தையும் பூஜை யறையில் வைத்து வழிபட வேண்டும். அதோடு வடை, பருப்பு, பானகம், நீர்-மோர், பாயசம், ஆகியவற்றை நைவேத்யம் செய்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அவற்றைத் தர வேண்டும். 


இந்த விழா கொண்டாடப்படும் நேரம் கோடைக்காலம் எனபதால் விசிறி தானம் செய்வது மிகவும் நல்லது. ராமநவமி விரதம் இருக்கும் போது ஸ்ரீராம ஜெயம் என்று 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு.  ரா என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும், ம என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப்பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப் படுவதாகவும் ஐதீகம்.


விரதம் இருக்கும் முறை:-


ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.


அன்றைய தினம் ராமர் கோவில் களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். 


குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.


ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.