வட மாநிலங்களில் உள்ள முக்கிய கோவில்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிருஷ்ணரின் ஜன்ம பூமியான உத்தரப்பிரதேச மாநில மதுரா நகரம் திருவிழாக் கோலம் பூண்டது. நள்ளிரவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.சரியாக பன்னிரண்டு மணிக்கு கண்ணனை தங்கத் தொட்டிலில் போட்டு பூமழை பொழிய தாலாட்டு லாலி பாடினர். கண்ணனுக்கு பாலாபிஷேகம், தயிர் அபிசேகம் போன்றவை நடைபெற்றன.


அமிர்தசரஸ் பொற்கோவிலை அடுத்து அந்த ஊரில் புகழ் பெற்ற துர்க்கையம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கிருஷ்ணன் சிலைக்கு சிறப்பு அலங்காரங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். குஜராத் மாநிலம் வடோதராவில் பள்ளிகளில் கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கண்ணனாகவும் ராதையாகவும் 1200 குழந்தைகள் வேடமிட்டிருந்தனர்.ஆடல் பாடல் என்று அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.




மும்பையில் முஸ்லீம் நடிகர்களான ஷாருக்கானும் அமீர் கானும் நேற்று கண்ணனின் ஜன்மாஷ்டமியை கொண்டாடினர். தயிர் உறியடி நிகழ்ச்சிகளிலும் இந்த இருபெரும் நடிகர்களும் பங்கேற்றனர். அமீர்கானும் ஷில்பா ஷெட்டியும் தங்கள் தயிர் உறியடி நிகழ்ச்சிகளை சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர்.


ஆக்ரா நகரில் முஸ்லீம் மக்கள் பெருவாரியாக இருந்த போதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்துக்களுடன் முஸ்லீம்களும் மத நல்லிணக்கத்துடன் ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராதாஷியாம் கோவிலில் ஜன்மாஷ்டமி நிகழ்ச்சிகள் களை கட்டின. பக்தர்கள் சுபிட்சம் பெருக வேண்டிக் கொண்டு பாத யாத்திரை மேற்கொண்டனர்.




டெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் செல்போனில் செல்பி எடுத்தபடி சாமி தரிசனம் செய்தனர். கண்ணனின் லீலைகள், குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவத் கீதை உரைத்தது, திரௌபதிக்கு சேலை தந்து மானம் காத்தது உள்ளிட்ட சம்பவங்கள் சித்திரமாக காட்சிப்படுத்தப்பட்டன.