வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 5.30 மணியளவில் பரமபத வாசலை கடந்து சென்று பக்தர்களுக்கு, ரத்தின அங்கி, வைர பூணூல், கிளி மாலையுடன் நம்பெருமாள் அருள்பாலித்தார். ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் இன்று இரவு வரை எழுந்தருள்வார். 


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 



வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.05 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவமூர்த்திகள் சொர்க்கவாசல் வழியாக வலம் வந்தனர்.


திருப்பதியில் நேற்று இரவு முதல் காத்திருந்த பக்தர்கள் வரிசையில் நின்று ஸ்ரீதேவியை தரிசித்தனர். தொடர்ந்து 44 மணி நேரம் இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி (இன்றும், நாளையும்) ஆகிய இரண்டு நாட்களில் 1,70,000 பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு பிறகு சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் அமைந்துள்ள கோவிலில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்து தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு வழங்குவதற்காக பிரசாதமாக 5000 லட்டுகள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.