ஆளுநர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக உயர்மட்ட விசாரணை குழுவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார். 


ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான அந்த விசாரணைக்குழு விரைவில் பேராசிரியையிடம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே, போலீஸ் விசாரணை நடத்திவரும் நிலையில் ஆளுநரின் விசாரணை எதற்காக என ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் சந்தேகம் எழுப்ப, அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கவே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை ராஜ்பவனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது, மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் எனக் கூறியுள்ளார்.


இதையடுத்து, செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் தருவாயில், பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் ஆளுநர் தட்டிக்கொடுத்தார். 


இது தொடர்பாக அந்தப் பெண் நிருபர், சமூக வலைதளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.


இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல. அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்குத் துளியும் ஏற்புடையது அல்ல!" என ட்வீட் செய்துள்ளார்.


கனிமொழி எம்.பி., தனது முகநூல் பதிவில், "நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரிகத்தையும் கடைப்பிடிப்பது அவசியம். பெண் பத்திரிகையாளரின் அனுமதி இல்லாமல் அவரைத் தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை" எனத் தெரிவித்துள்ளார்.