காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடத்துகின்றன. இதில், மு.க.ஸ்டாலின் உள்பட 9 கட்சி தலைவர்கள பங்கேற்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்காததை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி திமுக மற்றும் தோழமை கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி சார்பில் கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 


மேலும், கடந்த12ம் தேதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கருப்பு உடை, கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். 


கடந்த 13-ந் தேதி கூட்டணி கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமரை சந்தித்து முறையிட அனுமதி பெற்றுத்தரவும் கவர்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, கடந்த 16-ந் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கிறது.


புதுக்கோட்டையில் நடைபெறும் இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


இதேபோல மற்ற மாவட்டங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தோழமை கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.