2019 மக்களவை தேர்தல் முடிவு முழுமையாக வெளியாவதில் தாமதமாகும்... காரணம் என்ன?
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையான அறிவிப்பு வெளியாவதில் தாமதமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒரிசா உட்பட சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
தமிழகத்தை பொருத்த வரை வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிக்கும், 22 சட்டசபை தொகுதிக்கும் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வர உள்ளது.
இன்று வாக்குகள் எண்ணப்பட உள்ளதால், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்ப்படாமல் இருக்க அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படும். தபால் வாக்குகள் மற்றும் மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் ஒரே நேரத்தில் எண்ணப்படும். வாக்குகள் எண்ணப்பட்டு பின்னரே ஒப்பிகை சீட்டு எண்ணப்படும். இதனால் முடிவுகள் அறிவிப்பதில் சுமார் 5 மணி நேரம் தாமதமாகலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் முழுமையான முடிவுகள் தெரிய வர இன்று இரவு வரை கூட ஆகலாம் எனத் தெரிகிறது.
ஏழு கட்ட வாக்குப்பதிவுகளில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்திய வரலாற்றில் அதிக வாக்குகள் பதிவானது 2019 பாராளுமன்றத் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 8,000 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்களின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.