தேர்தல் வெற்றி எதிரொலி; அமித் ஷா மற்றும் கனிமொழி ராஜினாமா...
மக்களவை உறுப்பினராக பாஜக அமித் ஷா, ரவி சங்கர் பிரசாத் மற்றும் திமுக-வின் கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்!
மக்களவை உறுப்பினராக பாஜக அமித் ஷா, ரவி சங்கர் பிரசாத் மற்றும் திமுக-வின் கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்!
நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் குஜராத் மாநிலம் காந்திரநகர் தொகுதியில் இருந்து பாஜக தலைவர் அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேவேளையில் பிஹாரின் பாட்னா சாயிப் தொகுதியில் இருந்து ரவி சங்கர் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் தமிழகத்தின் தூத்துக்குடி தொகுதியில் இருந்து கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தாங்கள் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து மூவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி மற்றும் டி.ராஜா பதவிக்காலம் ஜூன் மாத இறுதியில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது கனிமொழி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக மூன்று இடங்களில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் வரும் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தமுறை திமுக மூன்று இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளது.
கூட்டணி உடன் படிக்கையின் போது மதிமுக-வுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் மதிமுக-விற்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பணிக் குழு தலைவருமான செல்வகணபதி, தொழிலாளர் முன்னேற்ற சங்கச் செயலாளர் சண்முகம் பெயரும் அடிபடுகிறது.
மேலும் சமீப காலத்தில் திமுகவின் பல்வேறு வழக்குகளை திறம்பட நடத்தி வெற்றி கண்டவருமான மூத்த வழக்கறிஞர் வில்சனுக்கு ஒதுக்கலாம் என்றும் மருத்துவர் எழிலனுக்கு ஒதுக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கிடையில் அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை மாதம் 24-ம் தேதியோடு நிறைவடைய உள்ள நிலையில் மன்மோகன்சிங் தமிழகத்திலிருந்து மாநிலங்களவை பதவிக்கு போட்டியிடலாம் என்ற தகவல் பரவுகிறது. எனினும் இதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் திமுக -விடமிருந்தும், காங்கிரஸிடமிருந்தும் வெளியாகவில்லை.