மீண்டும் மோடி பிரதமர் ஆக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதனை மதிக்கிறேன், தொடர்ந்து போராடுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் ராகுல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 


செய்தியாளர் சந்திப்பின் போது ராகுல் பேசியதாவது., "மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறோம். பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். கொள்கை ரீதியில் தான் போராட்டம் நடந்தது. பிரசாரத்தின் போது, மக்கள் தான் முடிவு எடுப்பார்கள் எனக்கூறினேன் . மக்கள் தெளிவான தீர்ப்பு அளித்துள்ளார்கள். பிரதமர் மோடி, பாஜக-வுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். 



அமேதி மக்கள் ஸ்மிருதி இரானியை தேர்வு செய்துள்ளார்கள். ஸ்மிருதிக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். குறைகள் ஏதும் சொல்ல விரும்பவில்லை. மோடி மீண்டும் பிரதமர் ஆவதை மதித்து ஏற்றுக்கொள்கிறேன். தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். நான் நினைத்ததில் எது தவறாக போனது என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று உகந்த நாள் அல்ல. 


மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூசவில்லை. என் மீது யார் அவதூறு வைத்தாலும் அவர்கள் மீது அன்பை செலுத்துவேன். தோல்வியை கண்டு தொண்டர்கள் பயப்பட தேவையில்லை. தொடர்ந்து போராடுவோம்" என தெரிவித்துள்ளார்.