டெல்லியில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான முழு அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) திங்கள்கிழமை அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வாக்கெடுப்பு குழு இந்த அறிவிப்பை வெளியிடும் என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.


தேர்தல் அட்டவணையை அறிவிக்க தேர்தல் ஆணையம் மாலை 3.30 மணிக்கு செய்தியாளர் கூட்டத்தை கூட்டியுள்ளது. தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட பின்னர், மாதிரி நடத்தை விதிமுறை உடனடியாக அமலுக்கு வரும்.



70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன்னர் ஒரு புதிய சபை அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தற்போது டெல்லி சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தலாம் என்று தீவிர ஊகங்கள் உள்ளன.


2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 70 இடங்களில் 67 இடங்களை வென்று டெல்லியில் ஆட்சி பிடித்தது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2015-ல் பாரிய வெற்றியைப் பதிவு செய்த பின்னர் தற்போது மீண்டும் தேர்தலை நாடுகிறது.


டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்கு முன்பே வீடு வீடாகச் சென்று தங்கள் பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது முகத்தை துணியால் மறைத்தபடி கம்புகள், இரும்பு கம்பிகளுடன் நுழைந்த ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மாணவர்களை பயங்கரமாக தாக்கினர். மாணவர்களை பயங்கரமாக தாக்கியுள்ளவர்கள் ABVP-யை சேர்ந்த மாணவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


ஆனால், வன்முறை சம்பவத்தில் ஈடுப்பட்டது இடது சாரிகள், காங்கிரஸ் கட்சியினர் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் JNU வன்முறை தொடர்ந்து மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் JNU வன்முறைக்கு எதிராக நாடுமுழுவதும் வெடித்த போராட்டங்கள் ஓய்ந்தபாடு இல்லை. குறிப்பாக தலைநகர் டெல்லியில் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றது.


இந்நிலையில் தற்போது டெல்லி சட்டமன்ற தேர்தல் தொடர்பான முழு அட்டவணை வெளியிடப் படும் என்றும், அட்டவணை வெளியிடப்பட்டது முதல் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. தேர்தல் விதிமுறை என்ற பெயரில் JNU வன்முறைக்கு எதிரான போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.