தூத்துக்குடி: இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ள 39 தொகுதிகளுக்கு முடிவுகள் நேற்று வெளியாகின. ஆரம்ப முதலே திமுக தலைமையிலான கூட்டணி முன்னணி வகித்தது. இறுதியில் 39 தொகுதியில் 38 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை திமுக கூட்டணி பெற்றது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.


திமுகவின் நட்சத்திர வேட்பாளர் கனிமொழி முதல் முறையாக மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களம் கண்டார். இருவரும் கடுமையான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர் குறிப்பிடத்தக்கது.


இந்தநிலையில், நேற்று காலை ஆரம்பமான வாக்கு எண்ணிக்கையின் போது கனிமொழி தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார். கடைசி வரை அவர் பின்னடைவே இல்லை. இறுதியாக திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி 3,47,209 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் கனிமொழி 5,63,143 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 வாக்குகள் மட்டுமே பெற்றார்.


ட்விட்டரில் வெற்றியை குறித்து கருத்து பதிவிட்ட கனிமொழி கூறியது, "தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்ற வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!


தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கும், வெற்றிக்காக அயராமல் உழைத்த மாவட்டச் செயலாளார்கள் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், திருமிகு. கீதா ஜீவன் அவர்களுக்கும் நன்றி.


ஆயிரக்கணக்கான கழகத் தோழர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும், எனக்காக வாக்களித்த தூத்துக்குடி தொகுதி வாக்காளர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்!


எனது நினைவுகளில் என்றும் என்னுடன் பயணிக்கும் எனது தந்தையை, தலைவரை இன்று அன்போடு நினைகூர்கிறேன்! அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், தமிழகத்தின் குறிப்பாக தூத்துக்குடி தொகுதியின் வளர்ச்சிக்காகவும் அயராது உழைப்பேன்.


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.