மீண்டும் பிரதமராகிறார் நரேந்திர மோடி; பாஜக கூட்டணி 345 இடங்களில் முன்னிலை
தற்போதைய நிலவரங்களை வைத்து பார்த்தால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் என்பதில் சந்தேகமே இல்லை
டெல்லி: நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைப்பெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. அதேவேளையில் தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 345-க்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதில் ஆட்சி அமைக்க தேவையான தனிப் பெரும்பான்மை 272 இடங்களில் பாஜக தனித்து முன்னிலை வகிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக முதல் முறையாக குறிப்பிடத்தக்க தொகுதிகளை வென்றுள்ளது. உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் முன்னணி பெற்றுள்ளது. இந்த நிலவரங்களை வைத்து பார்த்தால், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
இதனையடுத்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30-க்கு கட்சியின் மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.