வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ஜெய்சங்கர் குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடாளுமன்ற உறுப்பினரல்லாத ஜெய்சங்கர், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர். வெளியுறவுச் செயலராக இருந்த அவர் நரேந்திரமோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் அவரை குஜராத் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக்க பாஜக திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால் ஜெய்சங்கரை எளிதாக அம்மாநிலத்தில் இருந்து பாஜக-வால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளியுறவுத் துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கர் 1995-ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். இவரது தந்தை கே. சுப்பிரமணியன் திருச்சியைச் சேர்ந்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற ஜெய்சங்கர் சுப்பிரமணியன் 1977-ஆம் ஆண்டு வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்தார். 


சீனா மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்தியாவின் தூதராக செயல்பட்டவர். அந்த காலகட்டத்தில் சீனா, அமெரிக்காவுடனான பல்வேறு பிரச்சனைகளை மிகவும் திறமையாக கையாண்டு பாராட்டுக்களைப் பெற்றவர். 


கடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான போது அவரின் நன்மதிப்பை பெற்று 2015-ஆம் ஆண்டு  இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவியேற்றார். இந்நிலையில் தற்போது அவருடைய பதவிகாலம் முடிந்த பின்னர் அமைச்சரவையில் இடம் பெறச் செய்து ஜெய்சங்கருக்கு வாய்ப்பளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.