பாலாசாகேப் தாக்கரே இன்று உயிருடன் இருந்திருந்தால், பாஜக இப்படி தைரியமாக இருக்குமா? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ரோஹித் ராஜேந்திர பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் ரோஹித் ராஜேந்திர பவார், பாஜக-சிவசேனா கூட்டணியில் அரசாங்கத்தை உருவாக்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து கடுமையாக சாடினார். ஒரு பேஸ்புக் பதிவில், அவர் பாலாசாகேப் தாக்கரேவை மதிக்கிறேன் என்றும், சிவசேனா நிறுவனர் இன்று உயிருடன் இருந்திருந்தால் பாஜக “இவ்வளவு தைரியமாக” இருந்திருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


“மகாராஷ்டிரா மக்களின் மரியாதையைப் பெற்ற பல தலைவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஒரு தலைவர் கௌரவமான பாலாசாகேப் தாக்கரே ஆவார். நான் அவரை மதிக்க பல காரணங்கள் உள்ளன. ஒரு முக்கிய காரணம் தேசிய அரசியலில் அவரது அந்தஸ்தாகும். தேர்தலுக்கு முன், சிவசேனாவுடன் சம அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதாக பாஜக உறுதியளித்தது. ஆனால் இப்போது பாஜக அதன் வார்த்தைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பாலாசாகேப் தாக்கரே இன்று உயிருடன் இருந்திருந்தால், பாஜக இப்படி தைரியமாக இருக்குமா?” என்று இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கத்தை உருவாக்குவதில் தாமதம் ஏற்படுவதைப் பற்றி ஒரு குடிமகனாக கவலைப்படுவதாக வலியுறுத்திய ரோஹித் ராஜேந்திரா, ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இப்போது மழை பெய்யும் நிலையை எதிர்கொள்கின்றனர். மக்களின் பிரச்சனைகளுக்கு மத்தியில் பாஜக-சிவசேனா கூட்டணி தங்களது இருக்கை பிரச்சனை குறித்து பேசி வருகிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில் “கிராமப்புற மக்களும், நகர மக்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அரசாங்கத்தை ஆரம்பத்தில் அமைப்பதன் மூலம் சாமானியர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மக்கள் எங்களை எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுத்துள்ளனர். நாங்கள் ஆணையை ஏற்றுக்கொண்டு வேலை செய்யத் தொடங்கினோம். ஆனால் பாஜக-வுக்கும் சிவசேனா-வுக்கும் இடையிலான சமீபத்திய மோதல்கள் ஜனநாயகத்தை அவமதிப்பதாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



மேலும், பாஜக-சிவசேனா கூட்டணி அவர்களின் தற்போதைய வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு உறுதியான அரசாங்கத்தை உண்மையிலேயே தருமா என்று ரோஹித் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.


மூத்த அரசியல்வாதி ஷரத் பவாரின் நெருங்கிய உறவினரான ரோஹித் பவார், சமீபத்தில் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கர்ஜாத் ஜாம்கேட் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். மகாராஷ்டிரா அரசாங்கத்தின் தற்போதைய பதவிக்காலம் நவம்பர் 8-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.


சமீபத்தில் முடிவடைந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் 105 இடங்களை வென்றதன் மூலம் பாஜக ஒற்றை மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது, 288 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில் சிவசேனா 56 இடங்களைப் பெற்றது. என்ற போதிலும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.