நாடு முழுவதும் பாரதிய ஜனதா முன்னிலை வகிக்கிறது; தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூர் தவிர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்று முடிவடைந்துள்ளது. 


மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டசபை தேர்தலும் நடந்துள்ளது. உலகிலேயே அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தத் தேர்தல் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவாகவே உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்படுகிறது. எனவே, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் மக்களவை தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளன. 


இந்நிலையில், இன்று காலை எட்டு மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடக்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்திலிருந்தே பாஜக அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றன. காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 150 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 101 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. மற்ற கட்சிகள் 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.


வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து முன்னிலை பெற்றார். அமித் ஷா காந்தி நகர் தொகுதியில் முன்னிலை பெற்றார். அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கத்தில் முன்னிலை பெற்றார். காலை 8.30 மணிக்கு பிறகு ராகுல் சற்று பின்தங்கினார். அதேசமயம் வயநாடு தொகுதியில் ராகுல் தொடர்ந்து முன்னிலை பெற்றார். அதேபோல், ரேபரேலி தொகுதியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.