டெல்லி: நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த மே 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே பாஜகவின் கை ஓங்கியே இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக 346 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 90 இடங்களிலும், மற்ற கட்சிகள் 109  இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் அதிக அளவில் பாஜக முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொருத்த வரை மூன்று இடங்களில் பாஜக கூட்டணி கட்சி முன்னிலை வகிக்கிறது.


மத்தியில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், அதைவிட அதிக இடங்களில் பாஜக தனித்து முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் இணைந்தாலும் 200 இடங்கள் மட்டுமே வரும். எனவே ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றே தெரிகிறது. ஆனாலும் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் யாருக்கு எத்தனை இடம் கிடைத்தது என்பது தெரியும்.


2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. 2019 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க போவதால், நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பல இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.