உ.பி. மாநிலத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை கூட்டணியின்றி தனித்து போட்டியிட மாயாவதி முடிவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் அதிக தொகுதிகளைக்கொண்ட பெரிய மாநிலம், உத்தரப்பிரதேசம். இதன் காரணமாகவே பெரும்பாலான கட்சிகளின் கவனம் இம்மாநிலத்தின் மீது இருக்கும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க உத்தரப்பிரதேசத்தில் அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வரானார். 


இதன் காரணமாக, அம்மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவ்-மாயாவதி கூட்டணி, பா.ஜ.க-வை எதிர்த்தனர். இதற்குப் பலனும் கிடைத்தது. பல ஆண்டுகளாக பா.ஜ.க வசமிருந்த இரண்டு மக்களவைத் தொகுதிகளில் இந்தக் கூட்டணி வெற்றிபெற்றது. மக்களவை உறுப்பினர்களாக இருந்த யோகி முதல்வரானதால், இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவரும் மனநிலையில் மாயாவதி இருப்பதாக தகவல்கள் பரவியது. இது, இந்திய அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் மாயாவதி, தனது கட்சியின் வாக்குகள் அவர்களுக்குக் (சமாஜ்வாதி கட்சி) கிடைத்தன. ஆனால்,  அவர்களுக்கு அவர்களின் சமுதாய வாக்குகள்கூட கிடைக்கவில்லை என்றார். பல ஆண்டுகளாக அகிலேஷ் யாதவ் குடும்பத்தினரின் கைகளில் இருந்துவந்த தொகுதியில்கூட அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. கன்னாவுஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ்வின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். 3.5 லட்சம் யாதவ் சமுதாய வாக்குகளைக் கொண்ட தொகுதியில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. இதற்கு மேல் இந்தக் கூட்டணி பயனற்றது என கடுமையாகப் பேசியிருக்கிறார். 


இதை தொடர்ந்து இன்று, உ.பியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக மாயாவதி அறிவித்தார். இதுதொடர்பாக பேசிய அவர் “ சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைந்ததிலிருந்தே அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் எனக்கு மிகுந்த மரியாதை அளித்தனர். நானும் பல்வேறு வேறுபாடுகளை மறந்து நாட்டின் நலன் கருதி அவர்களுக்கு மதிப்பு கொடுத்தேன். எங்கள் உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டு தொடர்ந்து நீடிக்கும். எனினும் அரசியல் நிர்பந்தங்களை நாம் புறக்கணிக்க முடியாது. சமாஜ்வாதி கட்சியின் வாக்குவங்கியான யாதவ் சமூகத்தினரே அவர்களை ஏற்கவில்லை. அக்கட்சியின் வலிமையான வேட்பாளர்கள் கூட தோற்கடிக்கப்பட்டனர் என்பது உத்திரப்பிரதேசத்தின் தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்தார்.