முடியாதென்று எதுவும் கிடையாது!! ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, அவரது சொந்த தொகுதியான அமேதியில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி.
அமேதி: நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஆரம்ப முதலே அதிக இடங்களில் முன்னணி வகித்த பாஜக 350 இடங்களில் முன்னணி பெற்று மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 92 இடங்களிலும், மற்றவை 100 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.
மக்களவை தேர்தலின் போது பாஜக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஸ்மிருதி இரானி துணிச்சலாக மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்படும் அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டார். இவர் ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு இதே தொகுதியில் ராகுலுக்கு எதிராக போட்டியிட்டு 1.07 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
ஆனால் இந்தமுறை (2019 மக்களவை தேர்தல்) ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரசின் கோட்டையை தகர்த்து எறிந்தார்.
இந்த வெற்றியை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட ஸ்மிருதி இரானி கூறியது, "யார் சொன்னது வானத்தில் துளை இல்லை என்று" என்ற இந்தி பாடலை மேற்க்கோள் காட்டி வெற்றியை கொண்டாடினார்.
மேலும் தனது வெற்றியை அளித்த அமேதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.