சென்னை: நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் வேலூரை தவிர்த்து 39 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் அதிமுக கூட்டணி போட்டியிட்டா தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டனர். 


வாக்கு எண்ணிக்கையின் போது ரவீந்திரநாத் குமார் மற்றும் இளங்கோவன் இடையே கடும் போட்டி நிலவியது. சில சுற்றுகளுக்கு பின்னர் தொடர்ந்து ரவீந்திரநாத் குமார் முன்னிலையே வகித்து வந்தார். அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகளும், காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகளும் பெற்றனர். இறுதியில் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் என்பதால் அனைவரின் கவனம் அவர் மீது திரும்பி உள்ளது.


மத்தியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக 303 இடங்களை கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைக்கிறது. எனவே பாஜக அமைச்சரவையில்  ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கும் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது. அதற்காக தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் முயற்சித்து வருகிறார் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன.


இந்நிலையில், தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத் குமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார். 


ரஜினிகந்த் - ரவீந்திரநாத் குமார் சந்திப்பு அரசியல் அரங்கில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.