நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவினை நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ வசந்தகுமாரிடம் இருந்து வசூலிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட  2,59,933 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.


இதன் காரணமாக இவர் தான் வகித்து வரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் "நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த வசந்தகுமார் தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


ஆகையால் நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசு கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பணிக்காக செலவு செய்கிறது. ஏற்கனவே தமிழகம் 45,119 கோடி கடனில் உள்ளது.


இந்நிலையில் இடைத்தேர்தலை நடத்துவது என்பதே அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஆகவே நாங்குநேரி தொகுதியில் இடைத் தேர்தலை நடத்துவதற்கு காரணமான எச்.வசந்தகுமாரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவை வசூலிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும், எவ்வித பதிலும் இல்லை. எனவே, தேர்தல் செலவை வசந்தகுமாரிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் புகழேந்தி அமர்வு வழக்கினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.