டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 


நடைப்பெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்று இரவுக்குள் தேர்தல் முடிவு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது வரை வெளியாகியுள்ள சுற்றின் முடிவுகளில் இந்தியா அளவில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரபப்டி நாடு முழுவதும் பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 


வடமாநிலங்களில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் சுருட்டிய பாஜக, தென்மாநிலங்களில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. எனினும் காங்கிரஸ் கட்சி வடமாநிலங்களில் படுதோல்வியடைந்துள்ளது. 


இந்நிலையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய உள்ளார். 26-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார்.


பின்பு பாஜக தலைமையில் புதிய அரசு அமைக்க உரிமை கோருகிறார். மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.