எனது பேத்தி போல் நினைத்துதான் கன்னத்தில் தட்டினேன்: ஆளுநர் மன்னிப்பு!!
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பெண் நிருபரை கன்னத்தில் தட்டிய விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்பு கேட்டார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூர்யில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் செயலுக்கு தூண்டியதாக எழுந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தடவிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்தப் பெண் நிருபர், சமூக வலைதளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இது குறித்து ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அந்தப் பெண் நிருபர்:- ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் நிலையில், நான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்குப் பதிலாக, எனது அனுமதியின்றியே அவர் கன்னத்தில் தட்டினார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பலமுறை எனது முகத்தைக் கழுவியும் அதிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. கோபமும் ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டது. ஆளுநர் அவர்களே... தாத்தா என்கிற முறையில் எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முறையில் நீங்கள் இதைச் செய்திருக்கலாம்.
ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் செய்தது தவறு!" என்று ட்விட்டரில் கோபமாக ஆதங்கப்பட்டிருந்தார். இதற்கு மு.க ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறிய அவர், பெண் செய்தியாளரின் கேள்வியை பாராட்டும் விதமாகவும், எனது பேத்தி போல் நினைத்துதான் கன்னத்தை தட்டியதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளாக தானும் பத்திரிகைதுறையில் இருந்ததாகவும் ஆளுநர் விளக்கம் கொடுத்துள்ளார்.