புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா. கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின் போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.


இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்த காலக்கட்டம் பழைய ஏற்பாட்டு காலம் என்றும், பின்புள்ள காலம் புதிய ஏற்பாட்டு காலம் என்றும் பிரித்துள்ளனர். பழைய ஏற்பாட்டு காலத்தில் யூதர்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. பாவம் செய்த மனிதன், தன் பாவங்களுக்கு பரிகாரம் தேடி ஒரு ஆட்டுக்குட்டியை தேர்ந்தெடுப்பான். அந்த ஆட்டை பலிபீடத்திற்கு எடுத்து வந்து, அதன் மீது தன் கைகளை வைத்து தனது பாவங்களை அறிக்கையிடுவான். 


பின்னர் பலியிடும் ஆசாரியன் அந்த ஆட்டை பலிபீடத்தின் மீது கிடத்தி பலியிடுவான். அதன் ரத்தத்தை பாவம் அறிக்கையிட்ட மனிதன் மீது தெளித்து 'இந்த ஆடு மரித்ததன் மூலம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' எனக்கூறி அனுப்பி விடுவான். 


இந்த சம்பவத்திற்கு பின்னர் தான் 'பலிஆடு' என்ற செல் உருவானது. ஒருவர் செய்யும் தவறுகளுக்கு வேறொருவர் தண்டனை ஏற்கும் நிலை வந்தால் அவரை 'பலிஆடு' என குறிப்பிடுவது இதன் அடிப்படையில் தான். அந்த வகையில் இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், 'இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' என பைபிளில் கூறப்பட்டுள்ளது.


இயேசு கிறிஸ்து மக்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார். நோய்களை தீர்த்தும், உயிர் கொடுத்தும் நன்மை செய்தார். அவரது வழிகாட்டுதலை மக்கள் பின்பற்றினால், தங்கள் பிழைப்பிற்கு கேடு வரும் என சமயத்தலைவர்கள் அஞ்சினர். எனவே, அவர் மதவிரோத செயலில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தினர். 


தலைமைக் குருவாய் இருந்த கயாபா என்பவரின் மாமனாரான அன்னா, மக்களை தங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டுமென்றால் இயேசுவை கொன்றால் போதும் என்ற கருத்து தெரிவித்தார். மக்கள் எல்லோருக்காகவும், அவர்களின் பாவங்களுக்காகவும் பலி ஆடாக இயேசு அவர்கள் பாவங்களை தன் மேல் ஏற்று, தன் ஜீவ நாடகத்தை முடித்ததன் மூலம் மக்கள் அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமானார்.


இதை தான் நாம் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று கூறுகிறோம்...!