வாழ்நாள் முழுவதும் பெரும்பாலானோர் அவதிப்படும் குறைபாடாக நீரிழிவு இருக்கிறது. இன்னும் சிலர் நீரிழிவு என்றதும் தன்னால் எந்த சாதனைகளையும் செய்ய முடியாது என்று முடங்கிப் போய் விடுகின்றனர். டைப் ஒன்று நீரிழிவுக்கும், டைப் இரண்டு நீரிழிவுக்கும் வித்தியாசம் தெரியாமல் சிலர் குழப்பம் அடைகின்றனர். மூட நம்பிக்கைகளைக் களையும் விதத்தில் சிவகங்கை, பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா இதுகுறித்த தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

♦️ டைப் ஒன்று நீரிழிவு என்பது  பெரும்பான்மையினருக்கு குழந்தைப் பருவத்திலேயோ அல்லது வளர்இளம் பருவத்திலேயோ கண்டறியப்படும் குறைபாடாக இருக்கிறது. அதனால் தான் இதை Juvenile Diabetes ( குழந்தைப்பருவத்தில் வரும் நீரிழிவு) என்று அழைக்கிறோம். உடல் எடை திடீரென மெலிதல் , தளர்வு , சோர்வு , தொடர்ந்து தொற்று ஏற்பட்டுக் கொண்டே இருப்பது, பிறப்புறுப்பில் புண் ஏற்படுவது , ஆறாத காயம், அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வது, அதீத பசி உணர்வு , சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பது  போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம்.


♦️ ஒரு வைரஸ் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் அடித்து அதில் இருந்து குணமான பின்பு திடீரென அந்த வைரஸின் தாக்கத்தால் கணையத்தின் பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டு டைப் ஒன் நீரிழிவு ஏற்படலாம். 
ஆம்.. டைப் ஒன் நீரிழிவில் ஒருவரது உடலில் உள்ள கணையம் இன்சுலினை சுரக்காது அல்லது போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி இருக்காது. 


♦️ டைப் ஒன் நீரிழிவு என்பதை  ரத்தப்பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் . காலை வெறும் வயிற்றில் சி பெப்டைடு எனும் புரதத்தை ரத்தத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். அதன் அளவுகள் போதுமான அளவு இருந்தால் டைப் டூ எனவும் தேவையான அளவுக்கு கீழ் இருப்பின் டைப் ஒன்று எனவும் கொள்ளப்படும். 


♦️டைப் ஒன் நீரிழிவு என்று கண்டறியப்பட்டவர்களுக்கு வெளியில் இருந்து ஊசி மூலம் வழங்கப்படும் இன்சுலின் ஊசி "உயிர் காக்கும்" மருந்தாகும். இவர்கள் இன்சுலின் மருந்தை ஊசி மூலம் மருத்துவர் பரிந்துரையில் முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு போதும் அக்கம்பக்கத்தினர் பேச்சைக் கேட்டு இன்சுலினை நிறுத்தக் கூடாது. இன்சுலினை நிறுத்தினால் அமிலத்தன்மை ஏற்பட்டு உயிர் பிரியும் ஆபத்து நேரிடும். எனவே கட்டாயம் இன்சுலினை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. டைப் ஒன்று என்று கண்டறியப்பட்ட நீரிழிவு நண்பர்கள் இன்சுலினுடன் மட்டுமே தங்களின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். 



♦️ டைப் ஒன்று நீரிழிவு வந்துவிட்டதால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்ற எண்ணம் வேண்டாம். நிச்சயம்  இந்தக் குறைபாடுடனும் நம்மால் பல சாதனைகளை செய்ய முடியும். உரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று முறையாக இன்சுலின் போட்டுக்கொண்டு அனைவரும் வாழும் வாழ்க்கையை நீங்களும் சிறப்பாக வாழலாம்


மேலும் படிக்க |  உஷார் மக்களே! மாரடைப்புக்கு முன் ஏற்படும் மாற்றங்கள்


♦️ டைப் ஒன்று மக்களுக்கு உணவுக் கட்டுப்பாடு மிக மிக அவசியம். மாவுச்சத்து நிறைந்து உணவுகளை கட்டுப்பபடுத்திக் கொண்டு இனிப்பு சுவை மிக்க உணவுகளை உண்ணாமல் தவிர்த்து வர வேண்டும். தேவையான அளவு புரதம் நிச்சயம் உணவில் இருக்க வேண்டும். முட்டை , காய்கறி , கீரை, மாமிசம் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். பிரதி மாதம் மருத்துவரை விசிட் செய்து தங்களது நீரிழிவை கண்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும்.  கட்டாயம் வீட்டில் க்ளூகோமீட்டர் எனும் க்ளூகோஸ் கண்டறியும் கருவியை வைத்துக்கொண்டு தாங்களாகவே ரத்த சர்க்கரை அளவுகளை பரிசோதித்து குறித்து வர வேண்டும். 


♦️ இயன்றவரை அதிக மாவுச்சத்து உணவுகளைத் தவிர்த்து விடுவது சிறந்தது. எப்போதாவது சீட்டிங் செய்தால் அதற்குரிய அளவு இன்சுலினை அதிகரித்துப் போட்டுக்கொள்வதைப் பற்றி மருத்துவரிடம் பேசி தெரிந்து வைத்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் உணவு உட்கொண்டு சரியான நேரத்தில் இன்சுலினைப் போட்டுக்கொள்ள வேண்டும். 


♦️ கண் பரிசோதனை, பாதங்களுக்கான உணர்வு பரிசோதனை , இதய பரிசோதனை , சிறுநீரக பரிசோதனை போன்றவற்றை முறையே வருடத்திற்கு இருமுறை செய்து கொள்ள வேண்டும். நீரிழிவால் இந்த உறுப்புகளில் பாதிப்புகள் நேராத வண்ணம் காத்துக் கொள்வது நமது கடமையாகும். 



♦️இன்சுலின் விலை அதிகமாக இருக்கிறது. என்னால் அதற்கான செலவை செய்ய முடியவில்லை என்று வருந்த வேண்டாம். தமிழ்நாடு அரசின் மருத்துவமனைகள் அனைத்திலும் இன்சுலின் இலவசமாக நீரிழிவு நோயர்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே தயவு கூர்ந்து இன்சுலினைப் பெற்று தொடர்ந்து போட்டுக்கொள்ள வேண்டும்.


♦️ டைப் ஒன் டயாபடிஸ் ஏற்பட்டும் வாசிம் அக்ரம் எனும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர் தொடர்ந்து இன்சுலின் போட்டும் சாதனை படைத்தார். ஒருங்கிணைந்த பிரிட்டன் முடியரசின் பிரதமராக இருந்த தெரசா மேவுக்கும் டைப் ஒன் நீரிழிவு ஏற்பட்டது. அதையும் தாண்டி தான் அவர் பிரதமராக சிறப்பாகச் செயல்பட்டார்.


மேலும் படிக்க |  நிம்மதியான தூக்கம் வேண்டுமா; டின்னரில் ‘இவற்றை’ சேர்த்துக் கொள்ளுங்கள்..!!


♦️ டைப் ஒன்று நீரிழிவு உள்ள தாய்க்கோ தந்தைக்கோ டைப் ஒன் நீரிழிவுள்ள குழந்தைதான் பிறக்கும் என்ற அறிவியலுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கை பரப்பப்பட்டு வருகிறது. அதுவும் தவறாகும். டைப் ஒன்று நீரிழிவுள்ள பெண்ணாலும் ஆணாலும் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றடுக்க முடியும். அவர்களை சிறப்பாக வளர்க்க முடியும். இன்சுலின் எனும் ஒரு ஹார்மோன் மட்டுமே குறைபாடாக உள்ளது. அதை ஊசி மூலம் போட்டுக்கொண்டு அவர்களால் சராசரியை விடவும் நல்ல வாழ்க்கையை வாழ முடியும். 


♦️ திருமணம் சார்ந்த இல்லற பந்தத்திலும் தாம்பத்தியத்திலும் நன்றாகச் செயல்பட முடியும். எனவே அது சார்ந்த மூடநம்பிக்கைகள் இன்றி இணையைத் தேர்ந்தெடுங்கள். எனவே டைப் ஒன் நீரிழிவு என்பது முடிவுரையன்று. அது ஒரு புதிய தொடக்கம். நிச்சயம் டைப் ஒன்று நீரிழிவு மக்களைத் தொடர்ந்து நேசிப்போம்.


இவ்வாறு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G