அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர் வரைஅனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. ஆரோக்கியமாக உள்ளவருக்கு இந்தச் செரிமான நீர்களும் என்சைம்களும் தேவையான நேரத்தில் தேவையான அளவுக்குத் தேவையான இடத்தில் சுரந்து ‘செரிமானம்' எனும் அற்புதப் பணியைச் செய்து முடிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அசாதாரணமான நேரங்களில் செரிமானப் பாதையில் உண்டாகும் குறைபாடுகளால் அல்லது நோய்களால் இந்தச் செரிமான நீர்கள் சரியாகச் சுரப்பதில்லை. அப்போது செரிமானம் தடைபடும். இதையே ‘அஜீரணம்' என்கிறோம்.


அதிகக் காரம், புளிப்பு, மசாலா நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் இரைப்பையின் சளிப் படலம் சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது தடைபடும். இது அஜீரணத்துக்கு வழி அமைக்கும்.


உணவு உண்ட பின் வயிற்றில் ஏற்படும் சுகமின்மை, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிற்று உப்புசம், வயிற்றில் இரைச்சல். பசிக் குறைவு, வாய் வழியாகவும் ஆசனவாய் வழியாகவும் அடிக்கடி வாயு பிரிதல், பேதி அல்லது மலச்சிக்கல், வாயில் அதிகமாக உமிழ்நீர் சுரத்தல், வாய்நாற்றம் போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகள்.


உணவு தயாரிக்கும்போது கலப்பட எண்ணெய், கலப்பட உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவது அஜீரணத்தை வரவேற்கும்.


அதிகாலையில் எழுந்து நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்குச் செல்பவர்கள், வியாபாரிகள், மருத்துவப் பிரதிநிதிகள் போன்றோர் பெரும்பாலும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. இப்படி நேரம் தவறி உண்பதால், இவர்களுடைய குடலியக்கம் மாறுபடுகிறது. இதனால் அஜீரணம் ஏற்படுகிறது.


மனக் கவலை, மன அழுத்தம், கோபம், எரிச்சல், வெறுப்பு, சண்டை போன்ற உளக் கோளாறுகளுடன் உணவு உண்டால் உணவின் செரிமானம் குறையும். தூக்கமின்மை, ஓய்வின்மை, நாட்பட்ட பயணம் போன்றவற்றாலும் அஜீரணம் ஏற்படும்.


அஜீரணம் ஏற்பட்டதும் மருத்துவரிடம் பரிசோதித்துக் காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். 


மோர், இளநீர், பழச்சாறுகள், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள். பெரும்பாலும் ஆவியில் வேக வைத்த உணவு வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.


நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், உணவின் ஒரு பகுதியாகத் தினசரி எடுத்துக்கொள்ளவும். இரவில் தினமும் இரண்டு பழங்களை உண்ணுங்கள்


காலையில் எழுந்ததும் நடைப் பயிற்சி, யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யும் பழக்கமும் அவசியம்.