26/11: இந்தியா மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தை கொடுத்த தினம்
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் தாக்குதலின்போது உயிரிழந்த வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்திய மண்ணில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கருப்பு நாள் இன்று (26.11.2008). பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் அதிபயங்கர தாக்குதலை நடத்தினார்கள்.
கடல் மார்க்கமாக ஊடுருவி மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் (சி.எஸ்.டி.), காமா ஆஸ்பத்திரி, தாஜ் ஓட்டல், நரிமன் ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரெடெண்ட் உள்ளிட்ட இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள், அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர் என மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான பாதுகாப்பு படை அதிகாரிகளில் தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர் உள்பட பலரும் அடங்குவர்.
இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் மும்பையை மட்டுமில்லை நாட்டில் வாழும் அனைவருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தை கொடுத்தது. இந்த நிலையில் அந்த தாக்குதலின் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தீவிரவாத தாக்குதல் நடந்த இடங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதையொட்டி மும்பை நகரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலில் மொத்தம் 10 தீவிரவாதிகள் ஈடுபட்டனர். அதில் 9 பேர் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் அமீர் கஸாப் என்ற தீவரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் அவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு புனேயில் உள்ள யர்வாடா மத்திய சிறைச்சாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆனால் மும்பை தாக்குதலுக்கு 10 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் நீதிக்கு முன் இன்னும் நிறுத்தப்படவில்லை என்று விவாதங்கள் தற்போது எழுந்ததுள்ளது.
மும்பை தாக்குதலின் 10_வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுவதால், இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு நாட்டின் குடியரசு தலைவர், பிரதமர் உட்பட பலர் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.
"மும்பையில் நடைபெற்ற 26/11 பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்... மும்பை தாக்குதல்களின் போது பயங்கரவாதிகளிடம் போராடிய நமது துணிச்சலான போலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நன்றி" பிரதமர் மோடி கூறியுள்ளார்.