கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.. ஜப்பான் கப்பலில் சிக்கி தவித்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினார்கள்.
கொரோனா வைரஸின் பிடியில் தப்பித்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினார்கள். அவர்களுடன் 5 வெளிநாட்டினரும் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
புது டெல்லி: ஜப்பான் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமண்ட் இளவரசி என்ற கப்பலில் உள்ளவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கடந்த பல நாட்களாக கப்பலில் சிறை வைக்கப்பட்டு சிக்கித் தவித்த 119 இந்தியர்கள் விமானம் மூலம் நாடு திருப்பினார்கள். ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை இந்தியர்கள் மற்றும் அவர்களுடன் 5 வெளிநாட்டினரையும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த 5 வெளிநாட்டினர் இலங்கை, நேபாளம், தென்னாப்பிரிக்கா மற்றும் பெருவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களை விமானத்தில் அழைத்து செல்ல உதவிய ஜப்பானுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. மேலும் மற்றொரு விசேஷம் என்னவென்றால், இந்திய விமானப்படையின் ஒரு விமானம் சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து 112 இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரை அழைத்து வர உள்ளது.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது ட்வீட் மூலம், "டோக்கியோவிலிருந்து ஏர் இந்தியா விமானம் 119 இந்தியர்கள் மற்றும் இலங்கை, நேபாளம், தென்னாப்பிரிக்கா மற்றும் பெரு ஆகிய நாடுகளை சேர்ந்த 5 குடிமக்களுடன் டெல்லியில் தரையிறங்கியுள்ளது. COVID19 (கொரோனா வைரஸ்) காரணமாக டயமண்ட் இளவரசி என்ற கப்பலில் இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டன. ஒத்துழைப்பு அளித்த ஜப்பானிய அதிகாரிகளின் நன்றி மற்றும் பாராட்டுக்கள். ஏர் இந்தியாவுக்கு மீண்டும் நன்றி எனக் கூறியுள்ளார்.
டயமண்ட் இளவரசி என்ற கப்பலில் மொத்தம் 3,711 பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் 138 பேர் இந்தியர்கள். இந்தியா அழைத்து வரப்பட்டவர்களை தவிர மீதமுள்ள இந்தியர்கள் ஜப்பானில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிப்ரவரி 5 ஆம் தேதி ஜப்பான் கடற்கரையில் இந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டது. ஏனெனில் அதில் இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் அவர்களை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். கப்பலில் இருந்த சில இந்தியர்கள் உட்பட பலர் கொரோனா வைரஸ் சோதனையில் சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
உலகளவில் 37 நாடுகளைச் சேர்ந்த 800,000 பேர் இந்த கொடிய வைரஸால் பாதிக்கபட்டு உள்ளனர். அதே நேரத்தில் 2600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்பதை உங்களுக்கு சொல்கிறோம்.