1993-ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
1993-ம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இதில் 257 பேர் பலியாகினர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் மொத்தம் ரூ 27 கோடி மதிப்பிலான சொத்துகள் நாசமாகின.
இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. மேலும் இவ்வழக்கில் முக்கிய விசாரணை 2006-ம் ஆண்டு நிறைவு பெற்று 100 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக 2003 முதல் 2010 ம் ஆண்ட வரை 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில் ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் இதுவரை, நீதிமன்றம் சுமார் 750 குற்றச்சாட்டு சாட்சிகள் மற்றும் 50 சாட்சிகளின் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிபிஐ மேற்கொண்ட விசாரணையின் போது அபு சலீம் மற்றும் முஸ்தபா உள்பட நான்கு குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
1993 ஆண்டு ஜனவரி 16-ம் தேதியன்று சட்டவிரோதமாக ஏ.கே. 56 ரக துப்பாக்கிகள், 250 தோட்டாக்கள் மற்றும் சில கையெறி குண்டுகள் வைத்துள்ளதாக நடிகர் சஞ்சய் தத் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது நடிகர் சஞ்சய் தத் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 33 குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக உள்ளனர். இவர்களில் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம், அவரது சகோதரர் அனீஸ் இப்ராஹிம், முஸ்தபா, டைகர் மேமுன் உள்ளிட்டோரும் அடங்குவர்.
இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.